

கல்லில் மட்டுமல்ல மெல்லிய சந்தன மரச்சட்டம், ஒரேயொரு அரிசியிலும் தன்னுடைய கைவண்ணத்தால் தெய்வ ஸ்வரூபங்களைக் கொண்டுவருகிறார் டி.கே.பரணி என்னும் கைவினைக் கலைஞர்.
வேலைப்பாடுகளுடன் கூடிய தொம்பைகள் தொங்கும் சந்தன மண்டபத்தின் பீடத்தில் வீற்றிருக்கும் பார்வதி, அப்சரஸ்களின் நடனத்தைக் கண்டு களிக்கும் சிவன், பார்வதி, மூஷிகங்கள் பூட்டிய ரதத்தைச் செலுத்தும் கணேசன்… என பரணியின் கற்பனையில் 1 ½ இன்ச் முதல் 6 இன்ச் அகல சந்தன மரங்கள்கூட உயிர்ப்பெறுகின்றன.
சந்தன மரச் சிற்பங்களைச் செய்யும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் பரணி. “மினியேச்சர் கார்விங் எனப்படும் இந்தப் பாணி என்னுடைய தந்தையின் கண்டுபிடிப்பு. என்னுடைய தந்தை அரிசியிலும் சந்தன மரத்திலும் நுணுக்கமாகச் செதுக்குவதை அருகிலிருந்து பார்த்து அவரிடமிருந்து இந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்” என்னும் பரணியின் 12 அங்குல இஞ்ச் சந்தன மரச் சட்டத்தில் வடித்த சிவா புராண மினியேச்சருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. இவரின் கைத்திறமையால் வடிக்கப்பட்ட சென்னை, சாந்தோம் சர்ச்சின் மாதிரி, கிறிஸ்தவ மதத் தலைவர் போப்புக்குப் பரிசளிக்கப்பட்டு, வாடிகனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஆக்ஸா பிளேட், குடைக் கம்பி, சைக்கிள் ஸ்போக்ஸ் கம்பிகள்… இவையெல்லாம்தான் பரணி தன்னுடைய கலையைச் செதுக்கும் ஆயுதங்கள். “சந்தன மரச் சட்டங்களில் எங்களின் கைவினையின் மூலம் செதுக்கப்படும் படைப்புகள் தரமானவை. அதேநேரத்தில் விலை அதிகமானவை. எல்லோராலும் வாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் எல்லோராலும் ரசிக்க முடியும்” என்னும் பரணி, இந்திய அளவிலும் உலக அளவிலும் கைவினைக் கலைஞர்களுக்காக நடத்தப்படும் கண்காட்சிகள், போட்டிகள் பற்றிய விவரங்களை எல்லாக் கலைஞர்களும் தெரிந்து கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
1/2 அரிசியில் விநாயகர், சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர் உருவங்களையும், சந்தன மரச் சட்டத்தில் நுண்சிற்பமாகக் கோயில் தேர், திருக்கோயில், தாஜ்மஹால், மீனாட்சி திருக்கல்யாணக் காட்சி, கீத உபதேசம், ராமாயணக் காட்சிகள், மகாபாரதக் காட்சிகள் போன்றவற்றை அரை அடி மரச் சட்டத்திலிருந்து 2 அடி சந்தன மரத்தில் செய்திருக்கிறார் பரணி. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக நுண்சிற்பத் துறையில் ஈடுபட்டிருக்கும் பரணிக்கு தற்போது செதுக்குவதற்கு ஏற்ற தரமான சந்தன மரங்கள் அடக்க விலைக்குக் கிடைப்பதில்லை என்பதே பெரிய குறை என்னும் பரணி, கிரீஸ் போன்ற நாடுகளில் தமிழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கைவினைக் காட்சியில் பங்கேற்றிருப்பவர்.
டி.கே.பரணி