மௌனத்தைக் கேட்கவும்

மௌனத்தைக் கேட்கவும்
Updated on
1 min read

ஒரு சீன அரசன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அரசன் தன் மகனுக்கு அரசனாகும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் குருவிடம் அனுப்பிவைத்தார்.

குரு இளவரசனிடம், “ நீ காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா” என்றார்.

இளவரசன் காட்டில் பல இன்னல்களை அனுபவித்து ஆறு மாதங்கள் கழித்து வந்தார்.

குரு, “நீ காட்டில் என்னென்ன ஓசைகளைக் கேட்டாய் ?”

இளவரசன், “குருவே, நான் காட்டில் சிங்கங்களின் கர்ஜனை, புலியின் உறுமல், நரியின் ஊளையிடும் சத்தங்களைக் கேட்டேன்” என்றான்.

குரு, “நீ மீண்டும் காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா”

சலிப்படைந்த இளவரசன் இம்முறைத் தன் காதுகளைக் கொண்டுக் கூர்மையாகக் கேட்கத் தொடங்கினான். ஆறு மாதங்களுக்குப் பின் குருவின் முன் வந்து நின்றான்.

குரு அவனிடம் முன்புக் கேட்டக் கேள்வியையே கேட்டார்.

இளவரசன், “குருவே இம்முறை பறவைகளின் ஒலிகளைக் கேட்டேன், பூச்சிகளின் சத்தங்களைக் கேட்டேன்”

குரு மீண்டும் அவனைக் காட்டுக்கு அனுப்பினார். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இளவரசன் குருவின் முன் வந்து வணங்கி நின்றான். அவன் முகத்தில் அமைதியும் ஒளியும் குடிகொண்டிருந்தன. இளவரசனின் நிலையைக் கண்ட குரு அரசனை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்.

இம்முறை குரு அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இளவரசனே பேசத் தொடங்கினான், “குருவே, காட்டில் மொட்டுக்கள் அவிழும் ஓசையைக் கேட்டேன், பிற உயிர்கள் தங்கள் மனங்களில் பேசுவதையும் தெளிவாகக் கேட்டேன், அவற்றின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின் அதிர்வுகளையும் கேட்டேன்” என்றார்.

அங்கு வந்த அரசன், இளவரசன் பேசுவதையெல்லாம் ஆச்சரியத்தோடுக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

குரு அரசனைப் பார்த்து, “அரசனே இப்போது இளவரசன் நாட்டையாளும் முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார். வெறும் வெற்று ஆரவாரங்களில் உண்மை இல்லை என்பதையும், உண்மையானது மௌனத்துக்குள் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டார்.” என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசனும் இளவரசனும் குருவை வணங்கி விடைபெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in