

லக்னோவில் ஒரு காலத்தில் வாஜித் அலி ஷா என்றொரு மன்னன் இருந்தான். அவன் பல வகைகளில் வேடிக்கையான மனிதனாக இருந்தான். பகல் முழுவதும் உறங்கி இரவு முழுவதும் விருந்து, நடனம், இசையில் மூழ்கித் திளைக்கும் இரவுப் பறவை அவன்.
அவன் தன் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அனைத்து இசைக் கலைஞர்களையும் சபைக்கு வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினான். அவன் சபையில் ஆடாத நடனக் கலைஞர்களே இல்லையென்று சொல்லலாம்.
அவனுக்கு ஒரேயொரு நிறைவேறாத ஆசை இருந்தது. லக்னோவில் புகழ்பெற்றிருந்த ஓர் இசையறிஞரை மட்டும் அவனால் சபைக்கு வரவழைக்கவே இயலவில்லை. எத்தனையோ பேரைத் தூதர்களாக அனுப்பியும் ஏமாற்றம்தான்.
ஒரு நாள் வாஜித் அலியே நேரடியாகச் சென்று அந்த இசைக் கலைஞரைத் தனது சபைக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான்.
ஆனால் அந்த இசைக் கலைஞரோ, அரண்மனைக்கு வந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் என்றார்.
வாஜித் அலி விடவில்லை. என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தான். அந்த இசைக் கலைஞர் ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார்.
தனது இசைக் கச்சேரியைக் கேட்கும் பார்வையாளர்களில் ஒருவர்கூட, தலையைச் சிறிதளவுகூட அசைக்கக் கூடாது என்றார். தலையை அசைத்தால் அவர்களது சிரத்தை அறுத்துவிட வேண்டும் என்பதுதான் அந்தக் கடுமையான நிபந்தனை.
மன்னனும் ஒப்புக்கொண்டான். நகரம் முழுவதும் இசைக் கலைஞரின் நிபந்தனையுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தனை கடுமையான நிபந்தனைக்குப் பிறகும் சில நூறு பேர் அந்த இசைக் கலைஞரின் நிகழ்ச்சிக்குக் கூடினார்கள். அப்போது லக்னோ, ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எனக் கலைகள் உறவாடும் நகரமாக இருந்தது.
உருவிய வாட்களுடன் நூற்றுக்கணக்கான வீரர்கள் தயாராக இருக்க, இசை நிகழ்ச்சி தொடங்கியது. இசை சபையை நிரப்பியது. மெய்மறக்கும் இசையிலும் யாரொருவரும் தலையைச் சிறிதளவு கூட அசைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் இசையின் மயக்கத்தில் சிலரின் தலைகள் அசையத் தொடங்கின. வாஜித் அலி, இசைக் கலைஞரிடம் என்ன செய்யலாம்? என்று கேட்க, இசைக்கலைஞர் அவர்களின் பெயர்களை மட்டும் குறித்துக் கொள்ளச் சொல்லித் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்.
இசைக் கலைஞர் ஒருகட்டத்தில் தனது கச்சேரியை நிறைவு செய்தார். வாஜித் அலி அவரிடம் சென்று, தலையாட்டியவர்களை என்ன செய்வது என்று கேட்டான்.
“எனது பாடலை முழுமையாக உணர்ந்தவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கு மட்டுமே இப்போது நான் பாடப்போகிறேன். பிறருக்கு அந்தத் தகுதி இல்லை. சரியான தருணத்தில் எனது பாடல் ஒரு உயரத்தை எட்டியபோது, அவர்கள் தங்களை மறந்துவிட்டனர். நிபந்தனைகளை மறந்துவிட்டனர். தங்கள் வாழ்க்கையை மறந்துவிட்டனர். அவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டனர். அதற்காகத்தான் இந்த நிபந்தனையை இட்டேன். மற்றவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லுங்கள். இன்னும் இரவு மீதம் உள்ளது” என்றார்.