

பகவான் கண்ணன், பாண்டவர்களுக்காக துரியோதனனுடைய சபைக்குத் தூது சென்ற போது, பாண்டவர்களுக்காக மிகப் பெரிய பலமான கண்ணனை மாய்த்துவிட எண்ணினான் துரியோதனன். அதற்காக ஒரு நிலவறையைத் தோண்டி அதில் பல மலர்களை வைத்து, தழைகளால் மூடி அதன் மீது ஓர் ஆசனத்தையும் இட்டான். கண்ணன் அமர்ந்தவுடன் ஆசனம் நிலவறைக்குள் சரிந்து விழுந்தது.
உள்ளே இருந்த மல்லர்கள் கண்ணனை நெருக்கிக் கொல்ல முயன்றார்கள். உடனே கண்ணன் மிகப் பெரிய உருவம் எடுத்துக்கொண்டு அம்மல்லர்களை மாய்த்துவிட்டான்.
இதனை நினைவுகூரும் வகையில் மிகப் பெரிய திருவுருவத்துடன் பாடகத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். பாடகம் என்ற திவ்ய தேசத்தில் கோயில் கொண்டுள்ள இப்பெருமாளின் கர்ப்பக்கிருஹம் நிலவறையைப் போலக் குவிந்து காணப்படுவது ஓர் அதிசயம். பத்ர விமானத்தின் கீழ் வீற்றிருந்த திருக்கோலத்துடன் கிழக்கே திருமுக மண்டலமாகப் புன்சிரிப்புடன் மிக அழகான திருமேனியுடன் எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளுக்கு பாண்டவ தூதன் என்பது திருநாமம். பாடு என்பது மிகப் பெரிய என்ற பொருளிலும், அகம் என்பதற்கு இருப்பிடம் என்ற பொருளிலும் கொள்ளப்பட்டு இத்திவ்ய தேசத்துக்குப் பாடகம் என்பது பெயர். ஐந்து ஆழ்வார்கள் இப்பெருமாளைப் பாடியுள்ளனர்.