Last Updated : 14 May, 2021 03:24 PM

 

Published : 14 May 2021 03:24 PM
Last Updated : 14 May 2021 03:24 PM

’அட்சய திருதியை’; மாலையில் விளக்கேற்றி மகாலக்ஷ்மியை வழிபடுவோம்! 

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது என்கிறார் திருக்கோஷ்டியூர் ஸ்ரீராம் பட்டாச்சார்யர். .இன்று 14ம் தேதி அட்சய திருதியை நன்னாள்.

மேலும், ஸ்ரீராம் பட்டாச்சார்யர் அட்சய திருதியை நாளின் சிறப்புகள் குறித்துத் தெரிவிக்கிறார்.

வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில்தான் தொடங்குவார்கள்.

ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள் என்கிறது காசி க்ஷேத்திர புராணம். .

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு வாங்கினாலே போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். மேலும் இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது உறுதி.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகைப் படைத்தார் என்று புராணங்கள் விவரிக்கின்றன.

அட்சய திருதியை நாளில்தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும். ஆகவே அரிதான அட்சய திருதியை நாளை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிபட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகவும் சொல்கிறது புராணம்.

அட்சய திருதியை தினத்தை சமணர்கள் ’அட்சய தீஜ்’’என்றழைக்கிறார்கள்.

ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார் என்கின்றன ஞானநூல்கள். .

மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கம். வெள்ளிக்கிழமை மாலையில், வீட்டு வாசலில் விளக்கேற்றி, பூஜையறையில் விளக்கேற்றி, மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் வழங்கும்.

அட்சய திருதியை அன்று ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களைச் சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.
மகாலட்சுமி திருமாலின் திருமார்பில் நீங்காமல் இருக்க வேண்டும் என்று அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள் என்கிறாள் புராணம். .

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகில் உள்ள சிவன் கோயிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை, விளங்குளம் முதலான கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய்ச் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருக்கடன் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களைத் தரும்.

மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புதுக் கணக்கு தொடங்குகிறார்கள்.

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனமுருகி வணங்கிச் செல்வத்தைப் பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது தனம், தானியம் முதலான சகல செல்வங்களையும் தரும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x