Last Updated : 24 Dec, 2015 02:32 PM

 

Published : 24 Dec 2015 02:32 PM
Last Updated : 24 Dec 2015 02:32 PM

கிறிஸ்துமஸ் பெருவிழா: மாட்டுத் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்த மனுஷகுமாரன்

ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது கிறிஸ்து இயேசு பிறந்த பெத்லஹேம். இது யூதர்கள் பெருபான்மையாக வசித்துவந்த யூதேயா தேசத்தில் இருக்கிறது. ரோம சாம்ராஜ்யத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. எத்தனை வரிகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவும், குடும்பத்திலிருந்து ஒருவரையேனும் ராணுவத்துக்குக் கட்டாய ஆள் எடுப்பு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டது.

ஆனால் யூதர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லை. அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விலக்கு பெற்றதற்காக அவர்கள் அதிக வரி செலுத்திவந்தனர். எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது. இயேசுவை நிறைமாதக் குழந்தையாக மரியாள் கருவில் தாங்கியிருந்தபோது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு மக்கள் தொகைப் பதிவேட்டில் தன் குடும்பத்தைப் பதிவு செய்ய பெத்லஹேம் புறப்பட்டார் சூசை.

இறைமகன் பிறந்தார்

நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 12 கிலோமீட்டர்கள். வழக்கமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கால்நடையாகவும் கழுதைகள் மீதும், வசதியிருப்போர் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்தனர். இப்படிப் பயணம் செய்வோர் தங்குவதற்காக ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்குச் சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது.

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகிக் கசங்கியிருந்தன. மரியாள் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து, வந்த கழுதையின் மீதே படுத்திருந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை மரியாவும், சூசையும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்குக் கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை.

அந்த இடத்தில்தான் கடவுள் குழந்தையாகப் பிறந்தார். இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்குக் கிடைத்த இடம் எளிய இடம்தான். மாட்டுத் தொழுவத்தை தன் பிறப்பிடமாக மனு மகன் தேர்ந்துகொண்டது தன்னை எளிமையின் நாயகனாக உலகுக்கு அறிவிக்கவே. மீட்பர் அரண்மனையில் அரசியின் வயிற்றில்தான் பிறப்பார் என்ற புரட்டு ஆட்சியாளர்களின் தீர்க்கதரிசனங்களைக் கடவுள் தன் பிறப்பின் மூலமே பொய் என்று காட்டினார்.

எளிய மக்களே முதலில் கண்டனர்!

மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தையான இயேசுவைக் கண்டு வணங்கிட இடையர்களே முதலில் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை, மாறாக, எளியமக்களே இறைவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார். விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர் அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்த இசைத்த பண்புயர் கீதம் ''உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக'' எனத் தொடங்குகின்ற புகழ்பாடல்.

இறைவன் நம்மோடு

கன்னி மரியாளிடம் “பிறக்கவிருக்கும் குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும்” என்று கப்ரியேல் வானதூதர் அறிவிக்கிறார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள் தருகிறார். இதுதான் கிறிஸ்மஸ் தினத்தின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி. இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றுகிறார். எனவே, விரக்தியை விரட்டுங்கள். நம்பிக்கை இழந்திருந்தால் அதை மீட்டுக்கொள்ளுங்கள். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.

இயற்கையும் உலகின் பிற துன்பங்களும் நம்மைத் தாக்கும்போதெல்லாம் யாருமே இந்த உலகைக் காப்பாற்ற முடியாதது போன்ற அவநம்பிக்கை அலையாக எழும்போது அங்கே இறைவனின் கரங்கள் காக்கும் வல்லமையோடு நம்மைத் தாங்கிக்கொள்கின்றன என்பதை மறக்காதீர்கள். மனித முயற்சிகளோடு இறைவனின் அருளும் இணையும்போது இந்த உலகைச் சூழும் ஆபத்துகள் அனைத்தும் விலகிப் போவதை நீங்கள் காண்பீர்கள். இந்த நம்பிக்கையோடு இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவோம் வாருங்கள்.

ஏனெனில் இறைவன் நமக்காக மனு மகன் அவதாரம் எடுத்திருக்கிறார். எனவே அன்பின் அடையாளமாக நம் மத்தியில் பிறந்திருக்கும் குழந்தை இயேசுவை உள்ளம் குளிரப் போற்று கிறோம். நம்மில் யாரும் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தரப் பிறந்த தெய்வீக பாலகனுக்கு நன்றி கூறுவோம். அவரது பிறப்பால் அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கையின் ஒளி தோன்றும் உன்னதத் தருணம் இது. இன, மத, தேச எல்லைகள் கடந்து தெய்வக் குழந்தையின் அருள் அனைவரது உள்ளத்தையும் நிறைக்கட்டும். ஹேப்பி கிறிஸ்துமஸ்.

ஏன் டிசம்பர் 25 ?

ஆங்கில வருடங்களை ‘கிறிஸ்து பிறப்பிற்கு முன்’, ‘கிறிஸ்து பிறப்பிற்கு பின்’ என்று பிரித்து கடந்த காலத்தை அளவிடுகிறோம். அப்படிப் பார்த்தால், இயேசு பிறந்தது ஜனவரி முதல் தேதியாகத்தானே இருக்க வேண்டும்!? பிறகு ஏன் ஏன் கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்மஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதியில் கொண்டாடுகிறார்கள்?

கிறிஸ்துவின் பிறப்பு விழாவைப் பற்றி இரண்டு விதமான வாதங்களை விவிலிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றனர். அதில் முதலாவது கிறிஸ்தவ சமய வரலாறு. இரண்டாவது காலக் கணக்கீடு. முதலாவது வாதத்தின்படி ரோமாபுரியின் பேரரசன் அவ்ரேலியஸ் அன்றைய கிரேக்க மதத்தின் கடவுளர்களில் ஒருவரான சூரியக் கடவுளுக்கு கி.பி.274- ம் ஆண்டு தனது ஆட்சிக் குடையின் கீழ் இருந்த அனைத்து தேசங்களிலும் ஒரு விழா எடுக்க ஆணையிட்டான். அந்த விழாவை டிசம்பர் 25-ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளையிட்டான். பரலோகத் தந்தையைத் தவிர வேறு கடவுளர்களை வழிபட விரும்பாத கிறிஸ்தவர்களை ரோமாபுரியின் கிரேக்க விழா மோகத்திலிருந்து, காக்கும் முயற்சியாகப் பின்னாளில் தாய் திருச்சபையாக மலர்ந்த ரோம் தலைமைப் பீடமானது கிறிஸ்து பிறப்பு விழாவையும் இதே நாளில் கொண்டாட ஆணை பிறப்பித்தது. இது சமய வரலாறு பற்றிய ஆய்வுப் பார்வை.

இரண்டாவது வாதத்தின்படி இயேசுவின் வாழ்வை எடுத்துரைத்த புனிதர்களின் மறையுரைகளிலிருந்து மார்ச் 12-ம் தேதி இயேசுவின் பாடுகள் கொண்டாடப்பட்டதை அறிந்துகொள்ளலாம். இதன்படி பார்த்தால், மார்ச் 25-ம் தேதிதான் மரியாளுக்கு, கபிரியேல் வானதூதர் மங்கள வார்த்தை சொல்லியிருக்க வேண்டும் என்பது விவிலியளார்களின் முடிவு. அக்காலத்தில் யூதர்களின் கணித முறைப்படி மனித வாழ்வின் தொடக்கத்தையும், முடிவையும் ஒரேநாளில் முழு எண்ணிக்கை வருமாறு கணக்கிட்டனர்.

இந்த வாதத்தின்படி, மார்ச் 25-ல் இயேசு கன்னித் தாயின் கருவில் உருவானார். அதிலிருந்து சரியாக, ஒரு குழந்தை முழு வளர்ச்சி பெறும் காலத்தைக் கணக்கிட்டால், டிசம்பர் 25 ல் இறைமகன் இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது முடிபாக இருக்கிறது. இரண்டு வாதங்களுமே வேறு வேறாக இருந்தாலும், அடிப்படையில் அவை சொல்ல வருவது, டிசம்பர் 25-ம் தேதியை இயேசு பிரானின் பிறப்பு விழாவாகக் ஒப்புக்கொள்கின்றன என்பதுதான். மேலும் இயேசு பிறந்தது கடும்பனிக்காலம் என்பதும் சரிவரப் பொருந்துவதைக் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x