Last Updated : 24 Dec, 2015 02:25 PM

 

Published : 24 Dec 2015 02:25 PM
Last Updated : 24 Dec 2015 02:25 PM

ஆன்மிக வழிகாட்டித் தொடர்- 3: ‘நல்லது, செய்யுங்கள்’ என்றார் பெரியார் - கோவிந்த சாமி சித்தர்

திருவொற்றியூர் கடற்கரையில் தன்னை அறிந்தார் கோவிந்த சாமி. அங்கிருந்து நேரே புறப்பட்டு வந்தவர் மனதில் ஓடிய முதல் எண்ணம், இனி பொருள் தேடும் வாழ்க்கை தனதில்லை; கடவுளுக்கே அர்ப்பணமாகும் கருவி தான் என்பதே. தன்னைத் தொழில் கூட்டிலிருந்து விடுவித்துவிடுமாறு கேட்க, நண்பரை நோக்கிச் செல்கிறார் சாமி. அங்கே ஒரு ஆச்சரியம். நண்பருக்குப் புதிதாக ஒரு நல்ல வேலைவாய்ப்பு கூடிவந்திருக்கிறது. அவரும் தொழில் கூட்டிலிருந்து விலகிவிடலாம் என இவரிடம் சொல்லக் காத்திருக்கிறார். இருவரும் சந்திக்கின்றனர். ஒரே நாளில் தங்கள் தொழிலை இருவரும் சேர்ந்து கலைக்கும் முடிவையெடுத்தனர். சரக்குகள் யாவும் காலிசெய்யப்பட்டு, கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

அதே நாளில். இடத்தைக் காலிசெய்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தஞ்சாவூர் வந்தடைந்தார். தஞ்சாவூரில் இப்போது ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு கோயிலை அமைக்க கோவிந்தசாமி இறைவனின் கைக்கருவியானார். கையில் ஒன்றுமில்லாதவர்தான்; அன்றைக்கு அது பாம்புகளும் பூச்சிகளும் நெளிந்து பறக்கும் பாழடைந்த புதர் மண்டிய இடமும்கூட.

வழிகாட்டிய ஆசிரியர்கள்

சாமிக்கு நிறைய குருநாதர்கள் உண்டு. சிலருடன் பல காலம் அவர் இருந்திருக்கிறார். சிலருடன் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள அவர் சென்றிருக்கிறார். சிலரை ஒரு சில முறை மட்டுமே சந்தித்திருக்கிறார். சிலரோடு வாசிப்பின் மூலமாகவே உறவாடியிருக்கிறார். எப்படியிருந்தாலும் அவர்கள் எல்லோரையுமே உயர்ந்த நிலையில் வைத்துப் பூஜித்திருக்கிறார் சாமி. ஆன்மிக விசாரங்களை அவர் நிறையக் கற்றுக்கொண்ட இடம் கிருபானந்த வாரியார். சித்த வைத்தியத்தை அவர் கற்றுக்கொண்ட இடம் வாலையானந்த சுவாமிகள். ரமண மகரிஷியுடன் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார். இன்னும் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், வள்ளலார், அருணகிரிநாதர் என்று தொடங்கி புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் வரை அவர் வாசிப்பின் மூலமாகக் கற்றறிந்த குருக்கள் ஏராளம். சாமிக்கு இவர்கள் அனைவரின் மீதும் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டு; தனிப்பட்ட கருத்துகளும் உண்டு!

அவர், தன்னை எப்போதுமே ஒரு குருவாகவோ, சாமியாராகவோ சொல்லிக்கொண்டவர் அல்ல. ஆசிரமத்துக்கு வருபவர்களிடமே “நான் இந்த ஆசிரமத்தின் காவலாளி; அவ்வளவுதான்” என்பார். சாமியும் பெரியாரும் ஒரு முறை சந்தித்திருக்கிறார்கள். அப்போது, “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் பெரியார். சாமி, “மக்களுக்கு மருந்து செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாமி. “நல்லது, செய்யுங்கள்” என்று சொன்னார் பெரியார்.

சாமிக்குப் பெரியார் மீது நன்மதிப்பு உண்டு. பெரியாரை ஒரு ஞாநி என்று சொல்வார் சாமி. காஞ்சி மகாபெரியவருக்கும் சாமிக்கும் இடையே பரஸ்பர பிரியமும், அபிமானமும் உண்டு. காஞ்சியில் ஒருமுறை அவரைச் சந்தித்தபோது, மூன்று மணி நேரம் சாமி அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாமிக்குப் பலர் மீது தனித்த பார்வைகள் இருந்தன. ராமகிருஷ்ண பரமஹம்சரிடமிருந்த தெளிவு விவேகானந்தரிடம் இல்லை என்பது அப்படிப்பட்ட பார்வைகளில் ஒன்று!

ஆன்மிகத் தத்துவ விசாரங்களில், வேதாந்தம் - சித்தாந்தம் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபட்ட போக்குகளில் சாமி எப்போதும் சித்தாந்தவாதிகளையே சிறந்த வழியில் செல்பவர்களாகக் கருதினார். “உலகமே ஒன்றும் இல்லை என்று தனித்து ஒதுங்கிச் செல்வதில் அல்ல; இந்த உலக நலனுக்காக உண்மையாகவும், நேர்மையாகவும் சேவையாற்றுவதே மேம்பட்ட ஆன்மிக வழி” என்பது சாமியின் நிலைப்பாடு!

ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளன்று தஞ்சாவூர் முருகன் ஆசிரமத்தில் நடக்கும் சிறப்பு அர்ச்சனைகளும் மகேஸ்வர பூஜையும் கச்சேரியும் பிரசித்தி பெற்றவை. சுவாமியின் நூற்றாண்டு வருடமான 2015 வரை, 62 பங்குனி உத்திர விழா சிறப்புற நடைபெற்று வந்துள்ளது. அந்நாளில் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். முதலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு. அடுத்து பசியாறல். தொடர்ந்து கச்சேரி. ஆசிரமத்துக்கு வந்து செல்லாத இசைக் கலைஞர்களை எண்ணிவிடலாம். எவ்வளவோ பேர் வந்தாலும், மதுரை சோமுவுக்கும் ஆசிரமத்துக்கும் இருந்த உறவு இணையற்றது. சாமி மீது பெரும் மதிப்பு கொண்ட சோமு, “இது என் சொந்த வீடு. இங்கு என் மனம் போதும் என்று சொல்லும் வரை பாடுவேன்” என்று சொல்வார். முதல் நாள் மாலை தொடங்கும் பல கச்சேரிகள் மறுநாள் விடிந்தும் தொடர்ந்திருக்கின்றன. நல்ல சங்கீதம் நம் ஆன்மாவுடன் நேரடியாகப் பேசக் கூடியது என்பார் சாமி. சோமு ‘என்ன கவி பாடினாலும்...’ பாடலைப் பாடும்போது கண்ணீரில் கரைந்துபோவார் சாமி!

சாமி மீது இருந்த பிரியத்தினால் முருகன் ஆசிரமத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில், வாரியார் சாமிகள் தன் இன்னுயிர் இருந்தவரை, 35 வருடங்கள் தொடர்ச்சியாய் வந்து கலந்துகொண்டார். அப்போது ஒரு முறை சாமியிடம், “அன்னம்பாலித்தலுக்காக இவ்வளவு கஷ்டமும், செலவும் பட வேண்டியிருக்கிறதே நீ?” என்று கேட்டார் வாரியார் சாமிகள். “கை இல்லாதவரைப் பார்த்திருக்கேன், கால் இல்லாதவரைப் பார்த்திருக்கேன், வேறு பல உறுப்புகள் இல்லாதவர்களையும் பார்த்திருக்கேன். ஆனால், வயிறில்லாதவர்களைப் பார்த்ததில்லையே சாமி!” என்று அதற்குப் பதில் அளித்தார் சாமி. நிறைவான, ஆனந்தச் சிரிப்புடன் சாமி பதிலளிக்கும் இந்தத் தருணத்தைப் புகைப்படமாகப் பதிந்தார் ஒரு கலைஞர். இன்றும் ஆசிரமத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது இந்தப் படம்!

(தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x