Last Updated : 24 Dec, 2015 01:14 PM

 

Published : 24 Dec 2015 01:14 PM
Last Updated : 24 Dec 2015 01:14 PM

தேரோட்டம் இன்று: ஆத்மநாதா... மாணிக்கவாசகா...

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! …” என சிவபுராண வரிகளோடு தொடங்குகிற திருவாசகம் அருளப்பட்ட தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் என்னும் திருப்பெருந்துறை.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர்.

மன்னனுக்குக் குதிரை வாங்குவதற்காக கொண்டு வந்த பணத்தைக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டதில் நெல் விளையும் பகுதியான ஆவுடையார்கோவிலில் சிவபெருமானுக்கு கோயில் கட்டினார்.

சிற்பக் கலையின் மகத்துவம்

முற்றிலும் கல்லால் வடிக்கப்பட்டுள்ள இக்கோயில் மண்படங்களில் உள்ள கொடுங்கைகூரையானது (தாழ்வாரம்) அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. இவையாவும் கல்தானா என ஆங்கிலேயர்கள் தனது துப்பாக்கியினால் சுட்டு, இதுகல்தான் என உறுதி செய்துள்ளனர். அந்த அளவுக்கு கோயிலில் கொடுங்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் தூண், சுவர், கூரை என கோயில் வளாகமே சிற்பக்கூடமாகக் காட்சியளி்க்கிறது. கோயிலின் முன்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள அகோர வீரபத்திரர், ரணவீரபத்திரர் ஆகிய சிற்பங்கள் சிற்பக்கலையின் மகத்துவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

மேலும், நரியைப் பரியாக்கியதை வெளிப்படுத்தும் விதமான காட்சியும் வடிக்கப்பட்டுள்ளது. பிடிமானமில்லாத கற்கள், கற்சங்கிலிகள், பல நாட்டுக் குதிரைகள், பூ, ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைப்பதோடு, பக்தர்களின் மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. எத்தகைய மனக்கொந்தளிப்பைக் கொண்டவரும், கோயிலின் முதல் படியில் அடி எடுத்து வைத்து, கோயிலுக்குள் இறங்கிச் செல்வதற்குள் சாந்தமடைந்துவிடுவார். உள்ளே சென்றால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வெகு நேரமாகும் அளவுக்கு கோயில் வளாகம் சிற்பங்களால் நிறைந்துள்ளன.

குதிரை வாங்கக் கொண்டுவந்த பணத்தின்மூலம் கோயில் கட்டப்பட்டதால் குதிரைகளை வாங்க முடியாமல் மன்னனின் கோபத்துக்கு ஆளானார் மாணிக்கவாசகர். இதையறிந்த சிவபெருமான் அப்பகுதியிலிருந்த நரிகளைப் பரிகளாக்கிக் (குதிரை) கொடுத்தார்.

அருவ வழிபாடு

தமிழகத்துக் கோயில்கள் பெரும்பாலானவற்றில் உருவ வழிபாடுதான் நடக்கிறது. ஆனால், இந்தக் கோயிலில் மட்டும்தான் அருவ (உருவமற்ற) வழிபாடு உள்ளது.

அதேபோல, இங்கு மற்ற கோயில்களில் இருப்பதைப் போல் கொடிமரம் இல்லை. நந்தி இல்லை, பலிபீடம் இல்லை. ஆனாலும், விழுந்து வணங்குவதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மன் சன்னதியிலும் உருவம் இல்லை. மாணிக்கவாசகர் ஜோதியில் கலந்துள்ளார் என்பதால் மற்றக் கோயில்களைப்போல இங்கு வரும் பக்தர்களுக்கு தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. அதேபோல, அமுதின் ஆவி மட்டுமே ஆண்டவனுக்குக் காணிக்கையாக்கப்படுவதால் கருவறைக்கு முன்னால் பெரிய திண்டுகளில் ஆறுகால பூஜையின்போதும் அமுதை வடித்துக் கொட்டி வைக்கிறார்கள். பாகற்காய், கீரை சேர்த்து புழுங்கல் அரிசியில் அமுது படைக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் இறைவனே உற்சவ மூர்த்தியாக இருப்பதைப்போல அல்லாமல் இங்கு பக்தனான மாணிக்கவாசகரே உற்சவராக உள்ளார். எனவே இந்த ஆலயம் திருவாசகக் கோவில் என்றும் போற்றப்படுகிறது.

சிறப்புத் திருவிழாக்கள்

ஆனி திருமஞ்சனத்தின்போதும், மார்கழி திருவாதிரையின்போதும் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நிகழாண்டு டிச.15-ம் தேதி ராஜகோபுரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மார்கழி திருவாதிரைப் பெருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகரின் வீதியுலாவும் நடைபெற்றது.

டிச. 24-ம் தேதி காலை வேளையில் தேவாரம், திருவாசகப் பாடல்கள் ஒலிக்க தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாளான 25-ம் தேதி வெள்ளி ரதத்தில் வீதியுலாவும், 26-ம் தேதி அதிகாலை உபதேசக் காட்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தினர் செய்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x