தெய்வத்தின் குரல்: ஆச்சரியமான ஆச்சார்ய பக்தி

தெய்வத்தின் குரல்: ஆச்சரியமான ஆச்சார்ய பக்தி
Updated on
2 min read

ஆதிசங்கரரின் குருபக்தி

''ஆசார்யாள்'' என்ற மாத்திரத்தில் லோகமெல்லாம் நினைத்துப் போற்றும் நம் பகவத்பாதாளுக்கு இருந்த குருபக்தி சொல்லி முடியாது. பத்ரிநாத்தில் அவர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்பாதரையும், பரமகுருவான (குருவுக்கு குரு) கௌடபாதரையும் சாட்சாத் தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாகவே பார்த்து, அப்போதுதான் தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லி, அடிக்கு அடி அவர்களை நமஸ்காரம் பண்ணினார் என்று சொல்கிறதுண்டு.

இவரே அந்த தட்சிணாமூர்த்தியின் அவதாரந்தான். குருவின் மகிமையை ஆசார்யாள் ஒரு இடத்தில் சிலாகித்துச் சொல்லும்போது, “பித்தளையைக்கூடப் பொன்னாக்குகிற ஸ்பர்சவேதி மாதிரி குருவானவர் பித்தளை மனசுக்கரார்களையும் மாற்றித் தங்கமாக ஜ்வலிக்கச் செய்பவர் என்று சொன்னால்கூட குரு மகிமையை உள்ளபடி சொன்னதாகாது.

ஏனென்றால் ஸ்பர்சவேதியில் இருந்த பித்தளை தான் மட்டுமே ஸ்வர்ணமாக ஆகுமே தவிர, மற்ற பித்தளை வஸ்துக்களை சுவர்ணமாக்குகிற ஸ்பர்சவேதியாக மாறாது. ஆனால் குருவை ஆச்ரயித்த சிஷ்யனோ, தான் பூர்ணத்வம் பெறுவதோடு மட்டுமின்றி, தானும் குருவாகி மற்றவர்களுக்குப் பூர்ணத்வம் தருபவனாகிவிடுகிறான். அதனால் குரு ஸ்பரிசவேதிக்கும் மேலே'' என்கிறார்.

காசியில் பரமேஸ்வரனே சண்டாள வேஷத்தில் வந்துபோது, ''ஆத்ம ஞானியான ஒருத்தன் பிராம்மணனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவன் சண்டாளனாகப் பிறந்தவனாயிருந்தாலும் சரி, அவனே எனக்கு குரு'' என்று பரம விநயமாகச் சொன்னார் ஜகதாச்சார்யர்.

ராமாநுஜரின் குருபக்தி

ராமாநுஜாசாரியார் திருக்கோட்டியூர் நம்பி என்கிற தம்முடைய ஒரு குருவின் வார்த்தையை, எல்லா ஜனங்களுக்கும் உபதேசம் செய்தார் என்று பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவரே இதே நம்பியிடம் எத்தனை அடக்கத்தோடு நடந்து காட்டியிருக்கிறாரென்றும் வைஷ்ணவ குரு பரம்பரா கதைகள் சொல்கின்றன.

உபதேசம் தருவதற்கு முந்தித் திருகோட்டியூர் நம்பி ராமாநுஜாசாரியாரைப் பதினெட்டு தடவை ரங்கத்திலிருந்து திருகோட்டியூருக்கு நடக்கப் பண்ணிவிட்டே கடைசியில் உபதேசம் கொடுத்தாராம். ராமாநுஜர் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இப்படி நடையாக நடந்தாராம்.

ஸ்மார்த்தர்கள் ஆச்சார்யனுக்கு நாலு தரம் நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். வைஷ்ணவர்கள் ஆச்சார்யன் போதும் போதும் என்கிற வரையில் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு தரம் ரங்கத்துக்கு வந்த திருகோட்டியூர் நம்பி ஜில்லென்று காவேரி ஜலத்திலே (அல்லது படித்துறை மண்டபமாயிருக்கலாம்) நின்றுகொண்டிருந்தாராம். வெளியிலே ஆற்றங்கரை மணலோ நல்ல வெயிலில் நெருப்பாகக் கொதித்துக்கொண்டிருந்ததாம். அப்படிப்பட்ட மண்ணில் ராமாநுஜர் உடம்பு கன்றிப் போவதையும் பொருட்படுத்தாமல் நமஸ்காரம் பண்ணிக்கொண்டேயிருந்தாராம். அவருடைய குரு பக்தியை சோதனை பண்ண வேண்டும் என்று இப்படிச் செய்த நம்பி அப்புறம் மனசு தாங்காமல் அவரை நிறுத்தினாராம்.

சீக்கியரின் குருபக்தி

ஆச்சார்யன் கிடைத்துவிட்டால் போதும், சுவாமிகூட வேண்டாம். சுவாமிகூட ஆச்சார்யனுக்கு சமதையில்லை என்று பக்தி பண்ணினவர்கள் எல்லா சம்பிரதாயத்திலும் உண்டு. குரு என்றால் கூடவே இருந்தாக வேண்டிய ‘சிஷ்யன்' - ‘சிக்ஷ' என்பதை வைத்துத்தான் ‘சீக்கிய' மதம் என்பது ஏற்பட்டிருக்கிறது.

அதில் குரு கோவிந்த சிங் என்பவர் ‘கல்ஸா' என்கிற அவர்களுடைய ஸ்தாபனத்தை ஏற்படுத்தும்போது, நரபலி வேண்டும் என்று கேட்டாராம். உடனேயே ஒருத்தர் எழுந்திருந்து தன் தலையையே கொடுப்பதற்காக அவரோடு போனாராம். அவரை அழைத்துக்கொண்டு போன கோவிந்த சிங் கொஞ்ச நாழிக்கு அப்புறம் ரத்தம் சொட்டும் கத்தியோடு திரும்பி வந்து இன்னொரு பலி வேண்டும் என்றாராம். உடனே இன்னொருத்தர் எழுந்திருந்து அவரோடு போனாராம்.

மறுபடியும் அவர் ரத்தம் சொட்டுகிற கத்தியோடு திரும்பி வந்தாராம். இப்படியே ஐந்து தடவை அவர் பலி கேட்க ஐந்து பேர் சந்தோஷமாக குரு வார்த்தைக்காகப் பிராணத் தியாகம் பண்ணுவதும் பெரிசில்லை என்று அவர் பின்னோடு போனார்களாம். அப்புறம் அவர் அந்த ஐந்து பேரையுமே சபைக்கு அழைத்துக் கொண்டு வந்து, தம்மைச் சேர்ந்தவர்களின் பக்தி விசுவாசத்தை சோதனை பண்ணுவதற்காகவே இப்படி விளையாட்டாக பலி கேட்டதாகவும் வாஸ்தவத்தில் எவரையும் கொல்லாமல் ஏதோ ஆட்டு ரத்தத்தைத்தான் காட்டியதாகவும் சொல்லி, உயிரைத் திருணமாக நினைத்து பலியாவதற்கு வந்த அந்த ஐந்து பேரையும் கல்ஸாவில் முக்கியஸ்தர்களாக நியமித்தாராம்.

இப்படி எல்லா மதங்களிலும் அவற்றில் தோன்றிய மகான்களை தெய்வமாக விசுவாசித்த சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த குருபக்தியாலேயே அவர்களும் குருவைப் போன்ற யோக்யதையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு Spiritual Status (ஆத்மிக அந்தஸ்து) வந்தாவிட்டும் தங்களை மேலே கொண்டுவந்த மகானையே உயர்த்திச் சொல்லிப் பணிந்து வந்திருக்கிறார்கள்.

(தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in