

“கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வர். அழுகையோடு விதை எடுத்துச் செல்பவர்கள் அக்களிப்போடு கதிர்களைச் சுமந்துவருவர்” என்கிறது பைபிள்.
விதை, வித்து, கோதுமை மணி போன்ற வார்த்தைகள் வேதாகமத்தில் ஆழ்ந்த பொருள் கொண்டவை. விதை முளைப்பதோடு அதன் கடமை தீர்ந்துவிடுவதில்லை. அனைத்துச் சவால்களையும் சந்திக்க வேண்டும். சூழலுக்கேற்றாற்போல் கொஞ்சம் மண்ணுக்குள் வாளாவிருந்து பின்னர் முளைவிட்டு, பின்னர் தேங்கி, அப்புறம் ஓங்கி…என இயற்கையின் பல கட்டங்களைக் காண்கிறது விதை. தன்னை ஒரு விதையாக, தானிய மணியாக, மனிதர்கள் அரிதாகவே உணர்கிறார்கள். அப்படி உணர்ந்துகொள்ளும்போது பூமியும் காற்றும் நீரும் உயிரினங்களுடன் உள்ள உறவும் முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.
விதையை விதைப்பது வேண்டுமானால் நாமாக இருக்கலாம். ஆனால் அதற்கான பலனை முடிவுசெய்வது நாம் மட்டுமல்ல. வாழ்வு, நமது உடலையும் அறிவையும் கடந்து விரிந்து கிடக்கும் மர்மம். அதை வாழ்வது மட்டுமே நம்மை நமது எல்லை தாண்டி எடுத்துச் செல்லும். விதை இறந்தால் மரம் பிறக்கும். மலர் மலரும். மணம் பரவும். பிரபஞ்சத்தில் புதிய மணத்தைச் சேர்க்கும்.
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும்” என்கிறார் இயேசு. மனித வாழ்க்கைமுறையை விவரிக்கும் சிறந்த சொற்றொடர் இது. விதையின் பாதையில் மனிதர்கள் பயணம் செய்ய வேண்டும். விதையின் பாதை மிகவும் கடினமானது. வலி நிறைந்தது. துயரம் நிறைந்தது.
விதை மூன்று படிநிலைகளைக் கடந்து சென்றாக வேண்டும். முதலில் விதை மண்ணில் விழ வேண்டும். இரண்டாவது விதை மண்ணில் மடிய வேண்டும். மூன்றாவது விளைச்சலை அளிக்க வேண்டும்.
மிகுந்த விளைச்சலைத் தருவது பிறருக்காக. அடுத்தவரை உண்பித்தல். அடுத்தவருக்கு ஊட்டுதல். ஒரு கோதுமை மணி மண்ணில் விதைக்கும்போது அது தன்னை அழித்துக்கொண்டு ஒரு செடியாகப் புது உருவம் பெறுகிறது. அதன் கதிர்களிலிருந்து பல நூறு கோதுமை மணிகள் உருவாகிப் பிறரது பசியைத் தீர்க்கின்றன. உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும் விதையாக மாறித் தன் இனத்தைப் பெருக்குவதும் விதையின் பயணம். விதையின் பாதையில் பயணிப்போம். வாழ்வை மலரச் செய்து அக்களிப்போம்.