

நாத உபாசனையால் பக்தியை வளர்த்தவர்களில் பிரபலமானவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், முத்துத் தாண்டவர், ஊத்துக்காடு ஆவர். இவர்களைப் போலவே திருமலை திருப்பதி பெருமாள் மீது தேனினும் இனிய தெலுங்கு மொழியில் பல்லாயிரம் பாடல்களைப் இயற்றிப் பாடியவர் அன்னமய்யா. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தாளப்பாக்கம் என்ற சிற்றூரில் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தார்.
உத்தம வாக்கேயகாரர் என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட இவர் சிறு வயதிலேயே தம்பூரா சுருதியோடு தன்னிச்சையாகப் பாடத் தொடங்கினார் என்பர். 36 ஆயிரம் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார் என்றும், இப்போது கிடைத்திருப்பது 13 ஆயிரம் கீர்த்தனைகள்தான் என்றும் கூறப்படுகிறது.
ராமாநுஜருடைய வைணவ சிந்தனைகளை பிரதிபலிக்கும், இவரது கீர்த்தனைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பாடல்களாகக் கொண்ட ஒலித்தகடு ஒன்றினை ஆலயதரிசனம் ஆன்மிக இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஒலித்தகடில் உள்ள ஒன்பது பாடல்களும் திலங், ஹம்ஸாநந்தி, சாமந்தம், மோகனம், மிஸ்ரமலஹரி, மத்யமாவதி, சுத்ததன்யாசி, ரேவகுப்தி ஆகிய ராகங்களின் அடிப்படை கொண்டு மெல்லிசை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கீர்த்தனைகளைக் கம்பீரம் மற்றும் இனிமை நிறைந்த குரலில் பாடியுள்ளவர் விஷ்ணுப்ரியா சுதர்சன். இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளாக, வெங்கடேஸ்வரா பக்தி சேனல், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றிலும் பல மேடைகளிலும் கச்சேரிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல்களுக்கு இசையமைத்தவர் டாக்டர். வி.எல்.வி. சுதர்சன். புகழ்பெற்ற வயலின் மேதை வேதகிரியின் மகனான இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறைப் பேராசிரியராகத் தற்போது பணிபுரிந்து வருகிறார். ராமின் வயலினும், பாபா பிரசாத்தின் மிருதங்கமும் பக்க துணையாகப் பரிமளிக்கின்றன.
ஜாதி வேற்றுமை ஒழிக்கும் பாடல்
ஒலித்தகட்டில் உள்ள பாடல்களின் அர்த்த பாவம் பிரமிக்கவைக்கிறது. குறிப்பாக “விஜாலு துன்னி வ்ருதா வ்ருதா” எனத் தொடங்கும் மிஸ்ரமலஹரி பாடல் தரும் அர்த்தம் அற்புதமானது. ஜாதி வேற்றுமை பார்த்து என்ன ஆகப்போகிறது? ஜாதி, சரீரம் அழியும்போது தானே அழிந்துவிடும். ஹரியானவர் ஜாதி மதம் பார்த்து மனதில் குடி கொள்வதில்லை. அனைவர் மனதிலும் இருக்கிறார். தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் தான் உயர்ந்த ஜாதியினர்.
இதைப் போலவே “டெம் டெம்” என்று மேளம் அடித்து எல்லோரையும் கூட்டி இதோ பரமாத்மா வந்துவிட்டான்; அவனை அறிந்துகொள்ளுங்கள் என்று அழைக்கும் பாடல் அருமை.
திருப்பதி பெருமாளை ஒரு புடவை வியாபாரியாகக் கற்பனை செய்து பாடும் “வாடல வாடல வெண்ட” பாடல் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. பஞ்ச பூதங்களைக் நூலிழையாகக் கொண்டு, சஞ்சலம் என்ற கஞ்சியில் தோய்த்து, அருமையான புடவைகளை நெய்து கொண்டு வருகிறான், வேங்கடவன். அவன் அவரவர் கர்மங்களை எடை போட்டு அவரவர்க்கு தகுந்த புடவையை விற்கிறான் என்பது அந்தப் பாடலின் பொருள்.