Last Updated : 10 Dec, 2015 12:09 PM

 

Published : 10 Dec 2015 12:09 PM
Last Updated : 10 Dec 2015 12:09 PM

மழையில் மறைந்தது மாமத மாயை

உலகம் மாயை என்கிறது அத்வைத வேதாந்தம். பல ஆண்டுகளாகச் சேமித்து ஆசை ஆசையாய் வாங்கிய பொருள்களும் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடும் கண்ணெதிரே ஒன்றுமில்லாமல் போவதைக் கண்ட சென்னைவாசிகளுக்கு எல்லாம் மாயை என்னும் எண்ணம் ஒரு கணமேனும் ஏற்பட்டிருக்கும். பொருள்கள் நிலையற்றவை என்னும் சிந்தனை ஏற்பட்டிருக்கும்.

சொகுசு வசதிகள், கேளிக்கைகள், தேவைகள், அத்தியாவசியங்கள் அனைத்தையும் எந்த பேதமும் இல்லாமல் ஒன்றுபோலப் பாவித்து அடித்துச் சென்ற வெள்ளம் இயற்கையின் பேதமற்ற குணத்தைக் காட்டிவிட்டது. மனிதர்களிடையே காணப்படும் பேதங்களும் அப்படித்தான் என்பதையும் இந்தப் பேரிடர் காட்டியிருக்கிறது.

ஆம். மக்கள் தங்கள் எல்லா விதமான பேதங்களையும் மறந்து ஒன்று திரண்டார்கள். சக மனிதனைச் சாதி, மதம், மொழி, நிறம், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லாப் பேதங்களையும் இந்த வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. குறிப்பாக, இன்று இந்தியாவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்து - முஸ்லிம் வேற்றுமை சென்னையில் காணப்படவே இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்துக்களும் வேறுபாடின்றிக் களத்தில் இணைந்து நிற்கிறார்கள். யாருக்கு உதவுகிறோம் என்ற வேற்றுமை அவர்களிடத்தில் ஒரு சிறிதும் காணப்படவில்லை. முஸ்லிம் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள், தி.க. போன்ற கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அமைப்புகள் அனைத்தும் கொள்கைகள், மத அடையாளங்கள் ஆகியவற்றைத் தாண்டிச் சேவை புரிகின்றன.

சென்னையில் ஓரிடத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் புகலிடம் தேடி ஓடி வருகிறார்கள். தொழுகைக்காகப் பள்ளிவாசலில் கூடியிருக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும் சத்தத்தைக் கேட்டு வெளியில் வருகிறார்கள். பாதுகாப்பான இடம் தேடி ஓடிவரும் மக்களை மசூதிக்குள் வரும்படி மனமுவந்து அழைக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்த பிறகு இவர்களுக்குத் தொழுவதற்கு இடம் இல்லை.

“கருணையுள்ளவர்களுக்கு அருளாளன் அல்லாஹ் கருணை புரிகின்றான். பூமியில் உள்ளவர்களிடம் இரக்கம் காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்” (அபூ தாவூத், திர்மிதி) என்று சொல்லும் தங்கள் சமய போதனையைப் பின்பற்றும் அவர்கள் சாலைக்குச் சென்று தொழுகை செய்தார்கள்.

சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்துத் தரப்பினருக்கும் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டது. திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் உணவு, தங்குமிடம், தற்காலிகப் போர்வைகள், மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. உதவி கேட்டு வருவோரின் மத அடையாளங்களைக் கருத்தில் கொள்ளாது அனைவருக்கும் இவை வழங்கப்பட்டன.

களத்தில் நிற்கும் இந்துக்களும் யாருக்கு உதவுகிறோம் என்பதைத் துளியும் யோசிக்கவில்லை. சாதி, மதம் எதுவும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவை, பரோபகார்த்தம் இதம் சரீரம் (பிறருக்கு உதவுவதற்காகவே இந்த உடல் உள்ளது) என்னும் சிந்தனையுடன் அவர்கள் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் துயரத்துக்கு மதம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

வில்லிவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் (தொண்டர்கள்) வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த முஸ்லிம் ஒருவர், “அல்லாவின் பெருங்கருணையால் எனது குடும்பத்தினரை வெள்ளத்தில் இருந்து வெளியேற்றிவிட்டேன். தற்போது எனது வீட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வந்துள்ளேன். ஆனால், வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதால், உள்ளே போக பயமாக இருக்கிறது. யாராவது உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

ஸ்வயம்சேவகர்கள், அந்த முஸ்லிமுக்கு உடனடியாக உதவி செய்தனர். மனிதத்திற்கு வழிவிட்டு மதம் விலகி நின்ற இதுபோன்ற பல சம்பவங்கள் வெள்ள நிவாரணப் பணிக்களங்களில் நடந்துகொண்டிருக்கின்றன.

பேதங்களைப் பாராட்டாத மனித நேயம், சகோதரத்துவம், தன்னலமற்ற தொண்டு ஆகியவையே எல்லா மதங்களும் போதிக்கும் அடிப்படையான விழுமியங்கள். அரசியல் காரணங்களால் ஒவ்வொரு மதத்தவரும் இந்த அடிப்படை விழுமியங்களை விட்டு விலகுவதுபோலத் தோன்றலாம். ஆனால் அவையெல்லாம் மேலோட்டமானவை, தற்காலிகமானவை என்பதை இந்த நெருக்கடி நிரூபித்துள்ளது. இந்த உலகம் மாயையா, உண்மையா என்பதைச் சாதாரண மானிடர்களால் உணர முடியாது. ஆனால் மதங்களின் பெயரால் நாம் காணும் பேதங்கள் அனைத்தும் மாயை என்பதை இந்தப் பேரிடர் நிரூபித்துவருகிறது.

“இரக்கங்காட்டுங்கள் நீங்கள் இரக்கங்காட்டப்படுவீர்கள், மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” (முஸ்னத் அஹ்மத்) என்கிறது இஸ்லாமியச் சிந்தனை. “உலகிற்கு நன்மை செய்வதன் மூலமே ஒவ்வொரு ஆத்மாவும் மோட்சம் பெற முடியும் (ஆத்மனோ மோட்சார்த்தம் ஜகத் ஹிதாய ச)” என்கிறது இந்து சிந்தனை. இரண்டையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது இந்த வெள்ளம்.

கமலி பன்னீர் செல்வம் என்பவரின் அனுபவத்தை http://lalpetexpress.com/ இணையதளத்தில் காண முடிகிறது: “மூன்று மாடிக் கட்டிடம். கீழ்த் தளத்தில் நாங்கள். முதல் மாடியில் சுபைதா குடும்பம். இவர்கள் பாதுகாப்புக் கருதி படகில் வெளியே சென்றுவிட, தங்கள் வீட்டுச் சாவியை எங்கள் வசம் கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது மாடியில் இருந்த கிறிஸ்தவர் வீட்டிலிருந்து அரிசி எடுத்து சுபைதா வீட்டில் வைத்து சமைத்து உயிர் பிழைத்தோம். சுபைதா இல்லைன்னா நாங்க பிழைத்திருக்க முடியாது.”

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்... எங்கே போயின பேதங்கள்? மனிதம் எழுந்தது, மத அடையாளங்கள் ஒடுங்கின.

வெள்ளம் விரைவில் வடியட்டும். பேதங்கள் கடந்த இந்த மனித நேயம் வெள்ளமாய்ப் பெருகி நம்மை மூழ்கடிக்கட்டும். உண்மையான ஆன்மிக மறுமலர்ச்சி மனிதர்களை இணைக்கட்டும்.

அப்துல் ரஹ்மான் - தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் மாநிலச் செயலாளர்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதிலும் நிவாரணப் பணிகளிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் இளைஞர்கள் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எங்கள் மதம் சார்ந்த அடையாளத்தை வைத்து எத்தனையோ சந்தேகங்களுக்கும் தப்பெண்ணங்களுக்கும் உள்ளாகி பாதிப்புக்குள்ளான அப்பாவி இஸ்லாமியர்களில் நானும் ஒருவன். சென்னையில் இஸ்லாமியர்களுக்கு வீடுகள்கூடக் கிடைப்பதில்லை. வெள்ள பாதிப்புப் பணிகள் மூலமாக எல்லா தரப்பு மக்களிடமும் நல்லெண்ணத்தை மீட்டெடுத்துள்ளோம். அனைத்து சமய மக்களையும் நாங்கள் தொப்புள் கொடி உறவுகளாகவே நினைக்கிறோம்.

வி. ஆனந்த், - ஆர்.எஸ்.எஸ் ஊடகத் தொடர்பாளர்

சென்னையெங்கும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளான செய்தி வெளிவந்தவுடனேயே எங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டோம். எங்கள் அமைப்பில் பேரிடர் சமயங்களில் மக்களுக்கு எப்படித் தொண்டாற்ற வேண்டும் போன்ற பயிற்சிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தேவை உணவு என்பதை உணர்ந்து உணவுகளை வழங்கத் தொடங்கினோம். முதல் கட்டமாக மைலாப்பூரைச் சுற்றியுள்ள இடங்களில் 15 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினோம். 20 இடங்களில் நிவாரண முகாம்களை அமைத்து இரண்டு லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளோம்.

முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு பல்வேறு முனைகளிலிருந்தும் உணவு வழங்கத் தொடங்கியதால் உணவு கொடுப்பதை நிறுத்திவிட்டு அத்தியாவசியப் பொருட்கள் கொடுப்பதில் கவனம் செலுத்தினோம். அரிசி, பருப்பு, தட்டு, கரண்டி, போர்வை, குடும்பத்தினருக்குத் துணிகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றை ஒரு பையில் வழங்கினோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேராதவர்கள் என 700 பேர் பணியாற்றினோம். முஸ்லிம் தனவந்தர்கள் சிலர் நிவாரணப் பணிகளுக்குப் பொருட்களைத் தந்தனர். 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை எங்களோடு இணைந்து சேவையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x