Published : 03 Dec 2015 04:19 PM
Last Updated : 03 Dec 2015 04:19 PM

ஆன்மிகச் சுற்றுலா: நெய் ஆற்றங்கரையினிலே!

பாலும் தேனும் ஒரு தேசத்தில் ஓடிக்கொண்டிருந்தது என்றால் அது சுபிட்சத்தைக் குறிப்பதாகப் பொருள். ஆனால், அகத்தியர் வாழ்ந்த காலத்தில் நெய்யே ஆறாக ஓடிக்கொண்டிருந்தது என்ற நம்பிக்கை உள்ளது. அது எந்த இடம்? தற்போது கேரளம் என்றழைக்கப்படும் சேர நாட்டில்தான்.

சேர நாட்டு மண்ணுக்கும் அகத்தியருக்கும் நிறைய தொடர்பு உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியில் ஆசிரமம் அமைத்துக்கொண்ட இடம் இப்போதும் அகஸ்திய கூடம் என்ற பெயரில் வழங்கி வருகிறது. அவர் வளர்த்த ஹோமங்களும் யாகங்களும் கணக்கில் அடங்காதவை. அதன் பலனாக வந்த நெய் பெரிய பெரிய பானைகளில் நிரப்பி வைக்கப் பட்டிருந்தது. நாளாக நாளாக அது நிரம்பி வழிந்து கீழே பெருக்கெடுத்து ஓடியது. பிற்காலத்தில் அங்கு ஒரு சமயம் பஞ்சம் வந்து தலை விரித்து ஆடியது.

பின் பகவான் கிருஷ்ணனின் அருளால் தெளிந்த நீராக ஓடியது. அதனால் நெய்யாறு என்ற பெயர் அப்படியே நிலைத்துவிட்டது. அதன் கரையினிலே ஒரு அற்புதமான கோவில், நவநீத கிருஷ்ணருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் அதைச் சார்ந்து வளர்ந்த ஊர் நெய்யாட்டிங்கரா அதாவது நெய் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் என்றும் வழங்கப்பட்டது.

கீதோபதேஷச் சிலையுடன் வளைவு

திருவனந்தபுரத்திலிருந்து தென் திசையில் 20 கி.மீ.தொலைவில் உள்ள நெய்யாட்டிங்கராவுக்கு பிரதானமான இடத்தில் உள்ளது இந்தக் கோவில். கோவிலுக்கு முன்னே கீதோபதேசத்தின் சிலையுடன் வளைவு அமைந்துள்ளது. அதைத் தாண்டினால் பல தூண்களுடன் கூடிய மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட ஆண்டு கி.பி.1757.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் முக்கியமான அரசர்களில் ஒருவரான அநிழோம் (அனுஷம்) திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் இளவரசராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. பதவி ஆசை பிடித்த ஒரு கூட்டமும் இவரால் தண்டிக்கப்பட்ட மற்றொரு கூட்டமும் இவரை ஒழிக்கக் கங்கணம் கட்டி கொண்டு அலைந்தன. அதில் அவருடைய பங்காளிகளும் அடங்குவர். இவர் ஏற வேண்டிய அரியணையின் படிக்கட்டுகள் ஆபத்தானவையாக இருந்தன.

பலாமரத்தின் பிளவில் ஒழிந்த அரசர்

பகைவர்களிடமிருந்து தப்பி ஓட ஆரம்பித்தார். வழியில் நெய்யாட்டிங்கராவை அடைந்தார். தப்பிக்க வழி தெரியாமல் நின்ற அவர் முன்னால் ஒரு சிறுவன் புல்லாங்குழலுடன் பாட்டு பாடிக் கொண்டே நின்றான். விஷயத்தைக் கேட்ட அவன் அங்கிருந்த பலா மரத்தைச் சுட்டிக் காட்டினான். அதிலிருந்த பிளவில் ஒளியுமாறு கூறினான். அது சட்டென்று கண்ணில் படாதவாறு இருந்ததால் மார்த்தாண்டர் ஒளிந்துகொண்டு உயிர் தப்பினார். ஒரு அரச வாரிசின் உயிர் காத்த இந்த மரம் திருவாங்கூரின் வரலாற்றுச் சுவடுகளில் ‘அம்மாச்சி பிலாவு ' (தாய் பலா மரம்) என்று புகழ் பெற்று விளங்குகிறது. இன்றும் அந்த மரம் கோவிலின் ஒரு பக்கத்தில் வேலி அமைத்துப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

காலம் மாறியது. காற்று திசை மாற்றி வீசியது. மார்த்தாண்டர் பகைவர்களை வென்று முடி சூடினார். ஒரு நாள் அவர் கனவில் கிருஷ்ணர் ஆபத்திலிருந்து காப்பாற்றிய சிறுவன் உருவில் தோன்றி, ‘தேவை முடிந்தவுடன் என்னை மறந்து விட்டாயா’ என்று நினைவுறுத்தி தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு பணித்ததாகக் கூறப்படுகிறதுஃ. கனவு கலைந்த மன்னர் அந்தப் பலா மரத்துக்கு அருகிலேயே கோவில் கட்டுமாறு ஆணையிட்டார். முதலில் ஒரு சிலை செய்யப்பட்டது. அது சரியில்லாமல் போகவே வேறு ஒரு சிலை பஞ்ச லோகத்தில் செய்யப்பட்டு நெய்யாட்டிங்கராவில் ஸ்தாபிக்கப் பட்டது. இந்த மாநிலத்தில் இருக்கும் முக்கியமான பல கோவில்களைவிட இது இளமையானது.

பொன்னாலான கொடிக்கம்பம்

ஆலயத்தின் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் கீழே நெய்யாறு பாய்ந்தோடுவதைக் காணலாம். தென்மேற்குத் திசையில் கணபதியின் சந்நிதி உள்ளது. அவர் கிழக்கு முகமாக அமர்ந்திருக்கிறார். மூலவர் சந்நிதிக்கு முன்னால் தங்கத்தில் வேலைப்பாடுடன் கூடிய கொடிக்கம்பம் உள்ளது. கம்பத்துக்கு மேல் கருடன். கோவில் வெளிப்புறத்தில் முழுவதும் கேரள பாணியில் விளக்கு மாடம். நாலம்பலம் (உள் பிராகாரம்) எல்லாம் உள்ளடங்கியதாக உள்ளது. நமஸ்கார மண்டபம் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

கருங்கல்லினால் ஆன சோபானம் (கருவறைக்கு முன்னாள் உள்ள மேடை) கீழ்ப் பகுதி கவிழ்க்கப்பட்ட தாமரை இதழ்களை ஒத்திருக்கிறது. ஸ்ரீகோவில் (கருவறை)சதுர வடிவில் செப்புத் தகடுகளால் ஆன கூரையைக் கொண்டுள்ளது. சுவர் முழுவதும் ஓவியங்கள். கருவறை நுழையும் வாசற்கதவில் இருக்கும் துவாரபாலகர்களை அடுத்து வலதுபுற நுழைவாயிலில் காயத்ரி, ராமர் பட்டாபிஷேகக் காட்சி (அனுமனுடன்) மற்றும் யோக நரசிம்மரின் சித்திரங்கள். மூலவரான கிருஷ்ணஸ்வாமி மேல் திசை நோக்குகிறார். அவர் தன்னை நோக்கியுள்ள பத்மநாப சுவாமியை நோக்கியிருப்பதாக ஐதீகம்.

மூலவரின் விக்கிரகமும் அதன் அடிப்பகுதியும் பஞ்சலோகத்தாலானவை. மார்த்தாண்ட வர்மா தன் உயிரைக் காத்த சிறுவனின் உருவத்தை வரைந்து காட்டினார். அதைப் போலவே சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அவர் அந்த அந்த அம்மாச்சி பிலாவு மரத்தின் பக்கத்தில் அமர்ந்துதான் வரைந்து கொடுத்தார். கிருஷ்ணரின் உருவம் அழகிய பாலனைப் போல் வடிக்கப் பட்டிருக்கிறது.

தீப வெளிச்சத்தில் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். இரு கைகளிலும் வெண்ணை உருண்டைகள். அதனால்தான் அவர் நவநீத கிருஷ்ணன். பூஜைக்குப் பிறகு கைகளில் நைவேத்யமாக அசல் வெண்ணெய் உருண்டைகள் வைக்கப்பட்டுப் பின் பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அது நோய் தீர்க்கும் அருமருந்து என்கிறார்கள். பிரிந்திருக்கும் சடைமுடி, மூலவரின் தோளுக்குக் கீழ் வரை நீண்டிருப்பதுதான் சிறப்பம்சம்.

இந்த வெண்ணெய் திருடியான குட்டிக் கிருஷ்ணன்தான் இந்தப் பிரதேசத்தின் மக்கள் மனதில் குடி கொண்டு அருள் புரிகிறான்.

திருவிழாக்கள்

மலையாள மீன மாதத்தின் (மார்ச் / ஏப்ரல்) உற்சவம். மற்றவை சிங்கோம் (ஆகஸ்ட் / செப்ட்) மாத விழா, ஜன்மாஷ்டமி, விஷு, தனுர் மாசத்தில் (டிசம்பர் / ஜனவரி) வரும் ஏகாதசி திருநாள். தினமும் கோவிலில் மூன்று கால பூஜை உண்டு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x