திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லத் தடை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருவண்ணாமலையில் வரும் சித்ரா பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவுக்கு பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக, சித்ரா பவுர்ணமி தினத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லத் தடை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, கரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் தமிழகத்தில் இம்மாதம் 30-ம் தேதி இரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இதற்கிடையில், திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி தினம் இம்மாதம் 26-ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 12.16 மணி முதல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.59 மணிக்கு முடிகிறது. எனவே, இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது.

"தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா வைரஸ் தொற்று பரவாமல் பொதுமக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (ஏப். 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in