Published : 31 Dec 2015 10:59 AM
Last Updated : 31 Dec 2015 10:59 AM

ஆன்மிக நூலகம்: உமையொருபாகனின் வடிவழகு

நல்நியமம் கொண்டோரே, மாதொரு பாதியரைச் சொல்வேன் கேட்க. நாற்கரங் கொண்டவராயும் இருகரங் கொண்டவராயும் இருவகையாகச் சொல்லப்படுகிறார். வலப்பாதம் நேர் நின்று ஊன்றியதாயும் இடப்பாதம் வளைத்தூன்றியதாயும் அமைக்க. இடப்பகுதி பார்வதி உருவாயும் வலப்பகுதி மகேசரின் உருவாயும் கொள்க.

நாற்கரங்களாயின், வலப்புறம் சிவப்பகுதியாகவும் பரசு, அபயம் இவை கொண்டாதாயும், இடப்புறத்தில் மேற்கரம் மலரும், கீழ்கரத்தின் முழங்கைமுனை இடபத்தின் தலையில் ஊன்றியதாயும் கொள்க. இரு கரங்களாயின் வலப்புறம் வரதமும் இடப்புறம் மலர்கொண்டதாயும் அமைக்க.

வலப்பாகம் சிவபாக மென்பதற்குகேற்ப ஆண்களுக்கான அணிகளை அமைக்க. சிறிய மார்பகம் கொள்க. இடப்புறம் பெண்களுக்குரிய அணிகளும் பருத்த மார்பகமும் கொள்க. அல்லது வளைந்த வலப்பாதமும், நேர்நின்ற வளைந்த வலப்பாதமும், நேர்நின்ற இடப்பாதமும் கொள்க. வலக்கரத்தில் வரதம், இட முழங்கை விருஷபத்தின் தலையில் ஊன்றிய நிலை அல்லது வலக்கரத்தில் கபாலம், நீட்டிவிட்ட இடக்கரம் எனக் கொள்க.

வலப்புறம் கோபப் பார்வை, இடப்புறம் குளிர் பார்வை. வலப்புறம் தொடைகளிடையில் செருகிய வஸ்திரம், இடப்புறம் அவ்வாறே செருகிய சேலை. இவ்வாறு அர்த்தநாரீஸ்வரர் சொல்லப்படுகிறார்.

இடப்பாதி உமையாயும் வலப்பாதி ஹரனுமான உடல், பிறைமதி சூடிய சடைமுடி வலத்தும், கரண்டமகுடமும் பின்னியசடையும் இடப்புறத்தும் கொள்வது. வலப்புற நெற்றியில் அரைக்கண் அமைந்தது. இடக்காதில் சுருள் ஓலை அல்லது வாலிகம் அணிந்ததாயும், வலக்காதில் மணித்தோடுடனோ இல்லாமலோ அமையும்.

வலப்புறம் மழு, அபயம் இவையும், இடப்புறம் மலர், தேவிக்குரிய ஆயுதம் அல்லது கண்ணாடி இவை கொண்ட கரங்கள் கொள்க. உமையின் பகுதியில் பருத்த தனத்தை மூடிய சித்திர வேலைகள் கொண்ட ஆடையும் வலப்புறம் தோலாடையும் கொள்க. வலப்பாதம் சிறிது வளைவுடனும், இடப்பாதம் நன்கு ஊன்றி நிமிர்ந்ததாயும் கொள்க. இடப்பாதம் நூபுரம் (கொலுசு) கொண்டதாயும், வலப்பாகம் கழல் கொண்டதாயும் கொள்க. மிகுந்தவை சந்திரசேகரரை ஒப்பக்கொள்க. (இடப்புறம் பச்சை நிறமும் வலப்புறம் மணிநிறமும் கொள்க).

மகா அர்த்தநாரீசுவரர் (கலைக்களஞ்சியம்)

திருவாவடுதுறை ஆதீனம் சரசுவதி மகால் நூல் நிலையம் மற்றும் ஆய்வுமையம்

விலை: 650/-

தொடர்புக்கு: 9487713042

திருவாவடுதுறை- 609 803

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x