Published : 07 Apr 2021 06:04 PM
Last Updated : 07 Apr 2021 06:04 PM

நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆலயம்; உதகை புனித ஸ்டீபன் ஆலய 190-வது ஆண்டு விழா

புனித ஸ்டீபன் ஆலயம்.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயமான உதகை புனித ஸ்டீபன்ஸ் தேவாலயத்தின் 190-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, 1829-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி உதகையில் ஆங்கிலேயர்களுக்கு தேவாலயம் வேண்டும் என்ற நோக்கில், சி.எஸ்.ஐ. புனித ஸ்டீபன் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் தேவாலயமான ஸ்டீபன்ஸ் தேவாலயத்துக்கு 1830-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி கொல்கத்தாவின் பேராயர் ஜான் மத்தியாஸ், அந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார்.

பின்னர் 1831-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி பொதுமக்களின் வழிபாட்டுக்காக ஈஸ்டர் பண்டிகையின்போது ஆலயம் திறக்கப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் கடும் சிரமங்களுக்கு இடையே வெளியிடங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டுக் கட்டப்பட்டது. ஆலய ஜன்னல் கதவுகளின் கண்ணாடியில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரண காட்சி, இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரைப் பெற்றோர் கையில் வைத்திருக்கும் காட்சி போன்றவை ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

கட்டிட வடிவமைப்பு பிரம்மிக்க வைப்பதால், தற்போதும் அதனை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், இங்கிலாந்து நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

சிறப்புப் பிரார்த்தனை:

இந்நிலையில், உதகை சி.எஸ்.ஐ. புனித ஸ்டீபன் ஆலயம் கட்டப்பட்டு 190 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை நினைவுகூரும் வகையில் 190-வது ஆண்டு விழா இன்று (ஏப். 07) கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் பங்குத் தந்தை அருண் திலகம் நற்செய்தி வழங்கினார்.

இதில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்தவப் பாடல்களைப் பாடினர். சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 190-வது ஆண்டு விழாவையொட்டி ஆலயம் சார்பில் ஆதரவற்றவர்கள், முதியவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x