

காரைக்கால் கைலாசநாதர் கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்தப்படும். கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை. நிகழாண்டு விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலை பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 27) காலை தேரோட்டம் தொடங்கியது. இதனையொட்டி, அதிகாலை 3 மணிக்குப் பஞ்சமூர்த்திகள், அஸ்திரதேவருக்கு அபிஷேகம், காலை 6 மணியளவில் தேருக்கு புண்யாக வாஜனம், அஷ்டதிக் பலி பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளியதும் மகா தீபாரதானை காட்டப்பட்டது.
தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கியது. பாரதியார் சாலை, கன்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேர் இன்று (மார்ச் 27) மாலை நிலையை அடையும்.
மாவட்டத் துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எம்.காசிநாதன், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே. பிரகாஷ், உபயதாரர்கள், பக்தர்கள் பலர் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.
30-ம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா 31-ம் தேதி தெப்போற்சவம் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.