Last Updated : 27 Mar, 2021 11:48 AM

 

Published : 27 Mar 2021 11:48 AM
Last Updated : 27 Mar 2021 11:48 AM

வாலீஸ்வரருக்கு கல்யாணம்; தெப்போத்ஸவம்; திருமண பாக்கியம் தருவாள் திரிபுரசுந்தரி

வரமெல்லாம் தந்தருளும் வாலீஸ்வரரை வணங்குவோம். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்திடும் திரிபுரசுந்தரி அம்பாளை பிரார்த்திப்போம். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்றைய நாளில், பேரமனூர் வாலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணமும் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம்.

பங்குனி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். பங்குனி மாதம் என்பது பூஜைகளுக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்குமான மாதம். பங்குனி மாதத்தில்தான் தெய்வத் திருமணங்கள் பலவும் அரங்கேறியதாக புராணங்கள் விவரிக்கின்றன.

பங்குனி மாத உத்திர நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்த அற்புத நாளில்தான் ஸ்ரீமணிகண்ட சுவாமியின் அவதாரப் பிறப்பு நிகழ்ந்தது என சபரிமலை ஸ்தல புராணமும் சாஸ்தா புராணமும் விவரிக்கின்றன.

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளில்தான் சிவ - பார்வதிக்கு, முருகப்பெருமான் - தெய்வானைக்கும் திருமணம் அரங்கேறியது என்றும் அர்ஜுனன் அவதரித்த நாளும் இதுவே என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

பங்குனி மாதத்தில் ஆலயங்களில் பிரம்மோத்ஸவமும் பங்குனிப் பெருந்திருவிழாவும் விமரிசையாக நடைபெறும். பத்து நாள் விழாவாக நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழாவானது, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், திருவீதி புறப்பாடு, சிறப்பு ஆராதனைகள் என நடைபெறும்.

ஆலயங்களில் திருத்தேரோட்டம், சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் என நடைபெறுவதைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். திருக்கல்யாண வைபவத்தை தரிசித்தால், தடைப்பட்ட திருமணங்கள் இனிதே நடந்தேறும். நல்ல அன்பான வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கே உள்ள ஃபோர்டு கார் கம்பெனிக்கு எதிரில் கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் பேரமனூர் எனும் கிராமத்தை அடையலாம். இங்கே, கோயிலும் திருக்குளமுமாக அற்புதமாக அமைந்திருக்கிறது ஸ்ரீவாலீஸ்வரர் திருக்கோயில்.

புராண - புராதனப் பெருமைகள் கொண்ட வாலீஸ்வரர் கோயில் பல ஆண்டுகளாக வழிபாடுகளின்றி பூஜைகள் இல்லாமல் சிதிலம் அடைந்து காணப்பட்டது. உள்ளூர் அன்பர்கள், இந்த ஆலயத்தைச் செப்பனிட்டு, ஒவ்வொரு சந்நிதியாக எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள். மேலும் பரிவார தெய்வங்களும் அந்த தெய்வங்களுக்கு சந்நிதிகளும் அமைக்கப்பட்டன.
கிஷ்கிந்தை வாலி இங்கே வந்து பூஜைகள் மேற்கொண்டு சிவனருளைப் பெற்றான் என்றும் அதனால் இந்தத் தலத்து இறைவனுக்கு வாலீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது. அம்பாளின் திருநாமம் ஸ்ரீதிரிபுரசுந்தரி.


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கோயில் என்றும் மாமன்னன் ராஜராஜன் இந்தத் திருவிடத்துக்கு வந்து வழிபட்டான் என்றும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

ஒருகாலத்தில், விழாக்களும் பூஜைகளும் சிறப்புற நடைபெற்ற ஆலயம். இப்போதும் குறைவின்றி பூஜைகள் நடந்து வருகின்றன. பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, பங்குனி பெளர்ணமியும் உத்திரமும் இணைந்த அற்புதமான நாளில் (28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீவாலீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
நாளைய தினம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகின்றன.

மாலையில் பொன்னியம்மன் ஆலயத்தில் இருந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாக எடுத்துவரும் வைபவம் நடக்கிறது.

இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் சுவாமி ஸ்ரீவாலீஸ்வரருக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாளுக்கும் பக்தர்கள் சூழ, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள திருக்குளத்தில், தெப்போத்ஸவம் நடைபெறுகிறது.

ஆலயத்தில் உள்ள ஸ்ரீரத்னகணபதி, ஸ்ரீபாலமுருகன், துர்காதேவி, ஸ்ரீமணிகண்ட சுவாமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீலக்ஷ்மி நாராயணர், ஸ்ரீஅனுமன், நாகர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது.

சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை கண்ணார தரிசித்து மனதாரப் பிரார்த்தனைகள் செய்தால், இதுவரை தடைப்பட்டிருந்த திருமணங்கள் விரைவில் நடந்தேறும். நல்ல அன்பான வாழ்க்கைத் துணை அமைவார்கள். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்கசுமங்கலியாக வாழ்வார்கள் பெண்கள் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

வரமெல்லாம் தந்தருளும் வாலீஸ்வரரை வணங்குவோம். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்திடும் திரிபுரசுந்தரி அம்பாளை பிரார்த்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x