Last Updated : 26 Mar, 2021 09:51 AM

 

Published : 26 Mar 2021 09:51 AM
Last Updated : 26 Mar 2021 09:51 AM

வெள்ளி பிரதோஷ தரிசனம்; சுக்கிர யோகம் நிச்சயம்! 

வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசிப்போம். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறுவோம் என்பது ஐதீகம். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்வோம். சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவோம். சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். செவ்வரளியும் வில்வமும் சார்த்துவோம். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் ஈசன்!

சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகள் ஏராளம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.

அதேபோல், வாரந்தோறும் வருகிற திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக, வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். ஈசன், தன் சிரசில் சந்திரனை பிறையென சூடிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் சிவபெருமானுக்கு சந்திரசேகரர், சந்திரசூடேஸ்வரர், சோமேஸ்வரர், சோமநாதர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன என்கிறது புராணம்.

நட்சத்திரங்களில் திருவாதிரை சிவபெருமானின் திருநட்சத்திரம். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். எனவே திருவாதிரை நட்சத்திர நாளிலும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும். திதிகளில் சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது.

திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். திரயோதசி திதியில் பிரதோஷ பூஜை நடைபெறும். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெருமாள் அலங்காரப் பிரியன்; சிவபெருமான் அபிஷேகப் பிரியன். ஆகவே, லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்யப்படும்.

ஒவ்வ்வொரு கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்துக்கு ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. அப்போது பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் தரிசிப்பதால் ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன.

இன்று 26ம் தேதி பிரதோஷம். வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் பிரதோஷம் வருவது, கடன், தரித்திரம் முதலான பொருளாதாரச் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நீக்கும் என்றும் சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்றும் தெரிவிக்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்வோம். சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவோம். சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்குவோம். செவ்வரளியும் வில்வமும் சார்த்துவோம். வேண்டியதையெல்லாம் தந்தருள்வார் ஈசன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x