Last Updated : 25 Mar, 2021 03:28 PM

 

Published : 25 Mar 2021 03:28 PM
Last Updated : 25 Mar 2021 03:28 PM

பங்குனி உத்திரம்; பெளர்ணமி; சுபிட்சம் தரும் உன்னத வழிபாடு! 

பங்குனி மாதத்தை வழிபாட்டுக்கு உரிய மாதமாகப் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். மழைக்காலமும் குளிர்காலமும் முடிந்து கோடைக் காலம் தொடங்குகிற பங்குனி, விவசாயத்திற்கான மிக முக்கியமான மாதம் என்பார்கள்.

பங்குனி மாதத்தில்தான் ஏராளமான ஆலயங்களில் பிரம்மோத்ஸவ விழா நடைபெறும். பங்குனிப் பெருந்திருவிழா எனும் பெயரில் பத்து நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். காலையும் மாலையும் உத்ஸவ மூர்த்திகள், ஒவ்வொரு விதமான வாகனங்களில் திருவீதியுலா வருவார்கள். திருத்தேரோட்டமும் திருக்கல்யாண வைபவமும் கோலாகலமாக நடந்தேறும்.

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது. தை மாதத்தில் பூசமும் வைகாசி மாசத்தில் விசாகமும் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் ஆடி மாதத்தில் கிருத்திகையும் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும் விசேஷமான நாட்களாகப் போற்றப்படுகிறது. அதேபோல், பங்குனி மாதத்தில், உத்திர நட்சத்திர நாள் விசேஷ நாளாக, புண்ய தினமாகப் போற்றி வணங்கி ஆராதிக்கப்படுகிறது.
பங்குனி உத்திர நன்னாளில்தான் எண்ணற்ற தெய்வங்களுக்கு திருமணங்கள் நடந்தேறின என்று புராணங்கள் விவரிக்கின்றன.

நமக்கெல்லாம் பகவத் கீதை கிடைக்கக் காரணமாக இருந்த அர்ஜுனன் அவதரித்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். ஸ்ரீவில்லிபுத்தூரில் கோதை என்று நாமெல்லாம் கொண்டாடப்படுகிற ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திரம் நாளில்தான். .

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்தார்; சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கினார். மன்மதனை மீண்டும் சிவபெருமான் உயிர்ப்பித்தது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார் என விளக்குகின்றன ஞானநூல்கள். .

பங்குனி மாதத்தில் பௌர்ணமி திதியும் உத்திர நட்சத்திரமும் கூடிய பங்குனி உத்திரத்தன்று, காஞ்சியம்பதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும்.

இதேநாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவித் தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந் தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

வருகிற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரம். அற்புதமான இந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று சிவனாரையும் அம்பாளையும் கண்ணாரத் தரிசிப்போம். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
பெருமாள் சேவை சாதிக்கும் கோயில்களுக்குச் செல்வோம். தாயாரையும் பெருமாளையும் துளசி மாலை சார்த்தி வேண்டுவோம். மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்வோம்.

பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீட்டில் சுபிட்சம் நிலவும். தனம் தானியம் பெருகும். இல்லத்தில், தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x