Last Updated : 24 Mar, 2021 04:55 PM

 

Published : 24 Mar 2021 04:55 PM
Last Updated : 24 Mar 2021 04:55 PM

பங்குனி உத்திர நாளில் நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜை; மாங்கல்ய வரம் தருவாள் காந்திமதி அன்னை! 

திருநெல்வேலியில் அமைந்திருக்கும் ஸ்ரீகாந்திமதி அன்னை சமேத ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், பங்குனி உத்திர வைபவத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீகாந்திமதி அம்பாளையும் ஸ்ரீநெல்லையப்பரையும் தரிசித்து, வில்வார்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள். கருணைப் பார்வையால் பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் காந்திமதி அன்னையையும் நம் அப்பன் நெல்லையப்பரையும் மனதார வேண்டினால், மாங்கல்ய வரம் நிச்சயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில்தான் பல ஆலயங்களிலும் பிரம்மோத்ஸவ விழாக்களும் திருமண வைபவங்களும் சிறப்புற நடைபெறும்.

புராண புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் நெல்லையப்பர் கோயில். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய கோயில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சிவனாருக்கு தனி வாசலும் கோபுரமும் காந்திமதி அன்னைக்கு தனி வாசலும் கோபுரமும் இருக்க, இந்த இரண்டு கோயில்களையும் சந்நிதிகளையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட மண்டபமும் தூண் சிற்ப வேலைப்பாடுகளையும் பிரமிக்க வைக்கின்றன. இதனை சங்கிலி மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

நெல்லுக்கு வேலியிட்ட காத்தருளியதால் சிவபெருமானுக்கு நெல்லையப்பர் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் நெல்வேலி என்றும் மரியாதை சேர்க்கும் விதமாக, திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டதாகவும் ஸ்தல புராணம் விவரிக்கிறது. கோயிலில் சிற்ப நுட்பங்களும் ஏராளம். கல்வெட்டுகளும் நிறையவே இருக்கின்றன. கோயிலுக்கு வெளியேயும் திருக்குளம் அமைந்திருக்கிறது. கோயிலுக்கு உள்ளேயும் திருக்குளமும் வசந்த மண்டபமும் என அழகுறத் திகழ்கிறது நெல்லையப்பர் திருக்கோயில்.

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி உத்திர விழாவும் ஒன்று. அன்றைய தினம், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். சிவனாருக்கும் அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். காலையிலேயே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பங்குனி உத்திர நாளில்தான் எண்ணற்ற கடவுளர்களுக்கு திருமணங்கள் நடைபெற்றதாக விவரிக்கின்றன புராணங்கள். ஸ்ரீமீனாட்சி அம்மை சொக்கநாதர் திருமணம் முதலான கடவுளரின் கல்யாண வைபவங்கள் நடந்த இந்த நாளில், சுவாமி தரிசனம் செய்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

அன்று காலை, முதல்கால பூஜையை அடுத்து, ஐந்து கால பூஜைகளிலும் சிவ பார்வதியை தரிசிப்பது விசேஷம் என்கின்றனர் ஆச்சார்யர்கள். அன்று முழுவதும் நடைபெறும் சிறப்பு விசேஷ அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரவல்லது.

எனவே ஸ்ரீகாந்திமதி அம்பாளையும் ஸ்ரீநெல்லையப்பரையும் தரிசித்து, வில்வார்ச்சனையும் குங்கும அர்ச்சனையும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள். கருணைப் பார்வையால் பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் காந்திமதி அன்னையையும் நம் அப்பன் நெல்லையப்பரையும் மனதார வேண்டினால், மாங்கல்ய வரம் நிச்சயம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!

28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பங்குனி பெளர்ணமி. பங்குனி உத்திரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x