

திருப்பதிக்கு இணையான தலம் என்று போற்றப்படும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில், பங்குனி பௌர்ணமி நாளில், உத்திர நட்சத்திர வேளையில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இதில் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது.
குணசீல மகரிஷி வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது. இங்கே குணசீல மகரிஷி கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, இங்கே இந்தத் திருவிடத்தில் திருப்பதி வேங்கடவனாக காட்சி தந்து அருளினார். பின்னர் குணசீல மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமலை வேங்கடவனே இங்கே வந்து குடியமர்ந்து, செங்கோலுடன் ஆட்சி நடத்துகிறார் என விவரிக்கிறது ஸ்தல புராணம். .
குணசீல மகரிஷி தவம் இருந்த தலம் என்பதாலும் குணசீல மகரிஷிக்காக பெருமாளே வந்து தரிசனம் கொடுத்து அருளினார் இந்தத் தலம் குணசீலம் என்று போற்றப்படுகிறது. அதேபோல், இங்கே உள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி.
இன்றைக்கும் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி தன் கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தந்து சேவை சாதிக்கிறார்.
புதன்கிழமையும் சனிக்கிழமையும் குணசீலம் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். பௌர்ணமி சிறப்பு பூஜையும் உத்திர வழிபாடும் இங்கே சிறப்புற கொண்டாடப்படும். இதையொட்டி திருச்சி, முசிறி, குளித்தலை, நாமக்கல் முதலான ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசிப்பார்கள்.
இந்தத் தலத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்து, பெருமாளை தரிசித்து, தீர்த்தப் பிரசாதம் உட்கொண்டு, குணமடைந்து செல்கிறார்கள் என்பது ஆலயத்தின் தனிச்சிறப்பு. இந்தத் தலத்தில் மத்தியம் உச்சிகால பூஜை ரொம்பவே விசேஷம். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, பக்தர்களுக்கு முகத்தில் தீர்த்தம் தெளிக்கிற வழக்கம் உண்டு. இதனால் திருஷ்டி முதலான கண் திருஷ்டி சம்பந்தப்பட்டவை விலகிவிடும். தேக ஆரோக்கியம் கூடும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் தீரும் என்று விவரிக்கிறார்கள் பக்தர்கள்.
திருப்பதிக்கு இணையான திருத்தலம் என்று போற்றப்படும் குணசீலம் கோயிலில் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாளை தரிசித்துப் பிரார்த்திப்போம். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார் பிரசன்ன வேங்கடவன்!