மயிலையில் அறுபத்து மூவர் விழா!  அன்னதானம்; நீர் மோர்; இனிப்புகள் தானம்! 

மயிலையில் அறுபத்து மூவர் விழா!  அன்னதானம்; நீர் மோர்; இனிப்புகள் தானம்! 
Updated on
1 min read

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், ஏராளமான விழாக்களும் விசேஷங்களும் உண்டு என்றாலும் பங்குனி மாதத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா அமர்க்களப்படும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வரும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறுகிறது. இந்தவிழாவின் போது அன்னதானம் ஆங்காங்கே நடைபெறும். நீர்மோர், பிஸ்கட், இனிப்புகள் என பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

சென்னையின் மிக முக்கியமான பகுதியாகத் திகழ்வது மயிலாப்பூர். இங்கே ஸ்ரீகற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிற அன்பர்கள், நிச்சயமாக கற்பகாம்பாளையும் கபாலீஸ்வரரையும் தரிசித்துச் செல்வார்கள்.

மயிலையே கயிலை, கயிலையே மயிலை என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம் மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில். இங்கே பனிரெண்டு மாதங்களிலும் ஏதேனும் விழாக்கள் விமரிசையாக நடந்து வருவது வழக்கம். பங்குனி மாதம் வந்துவிட்டால், பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்துநாள் விழாவாக அமர்க்களமாக நடந்தேறும்.

மதுரையில் சித்திரைத் திருவிழாவும் மீனாட்சி திருக்கல்யாணமும் எப்படி பிரசித்தமோ, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா எந்த அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்ததோ, சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை எப்படி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதோ... மயிலாப்பூர் கோயிலில், பங்குனிப் பெருவிழாவில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்கே பிரமாண்டமாகவும் அமர்க்களமாகவும் விமரிசையாகவும் நடைபெறும்.

பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல், திருஞானசம்பந்தர், பூம்பாவை எனும் சிறுமியை உயிர்ப்பிக்கிற திருக்காட்சி, மேற்கு குளக்கரையில் உள்ள மண்டபத்தில் நடைபெறும். பிறகு அன்றைய தினம் மாலை 3 மணிக்கு வெள்ளி விமானத்தில் ஸ்ரீகபாலீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைக்குப் பிறகு, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் சுவாமியும் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தேறும்.

முன்னதாக, இந்த விழாவையொட்டி, காலையில் இருந்தே அன்பர்கள் பலர், நான்கு வீதிகளிலும் இருந்து கொண்டு, உணவுப் பொட்டலங்கள், பானகம், மோர், விசிறி, பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்குவார்கள். வருகிற 26ம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெறுகிறது அறுபத்து மூவர் விழா.

அறுபத்து மூவர் விழாவையடுத்து, இரவு 10 மணிக்கு பார்வேட்டைக்கு சந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

பக்தியால் தொண்டுகள் செய்து இறையருளைப் பெற்ற அறுபத்து மூவரையும் வணங்குவோம். கபாலீஸ்வரரைக் கண்ணாரத் தரிசிப்போம். குருவருளையும் திருவருளையும் பெறுவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in