Last Updated : 24 Mar, 2021 10:21 AM

 

Published : 24 Mar 2021 10:21 AM
Last Updated : 24 Mar 2021 10:21 AM

பிரம்மா கோயிலில் வியாழக்கிழமையில்  பிரம்மோத்ஸவ  தரிசனம்! 

குரு பிரம்மா தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோயிலில், பங்குனி பிரம்மோத்ஸவப் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில், பிரம்மாவுக்கு உகந்த வியாழக்கிழமையில், பிரம்மோத்ஸவத்தின் போது பிரம்மாவை தரிசித்தால், மகா புண்ணியம் என்றும் இதுவரையிலான தோஷங்களும் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

பிரம்மாவுக்கு என ஆலயங்கள் வெகு குறைவு. அந்த குறைவான ஆலயங்களில் நம் வாழ்வையே நிறைவுபடுத்துகிற, செம்மைப்படுத்துகிற கோயிலாகத் திகழ்கிறது திருப்பட்டூர் திருத்தலம்.

மகாவிஷ்ணு, பிரம்மா, பதஞ்சலி முனிவர், வியாக்ர பாத முனிவர் முதலானோரோல் பூஜிக்கப்பட்டு வழிபடப்பட்டு, வரங்களைப் பெற்ற திருத்தலம் எனும் பெருமை மிக்க திருத்தலம் திருப்பட்டூர்.

திருச்சியில் இருந்து சென்னைக்குச் செல்லும் சாலையில் சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

திருப்பட்டூரில் உள்ள சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்ம சம்பத்கெளரி. பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் வணங்கி தவமிருந்து வழிபட்டு அருள் பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். இங்கே காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோயிலும் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலில், வியாக்ரபாதரின் பிருந்தாவனம் (திருச்சமாதி) அமைந்திருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், பதஞ்சலி முனிவரின் பிருந்தாவனமும் அமைந்திருக்கிறது.

பிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்தார் சிவனார். அதைவிட முக்கியமாக, படைப்புத்தொழிலையே பறித்துக் கொண்டார். கர்வம் கூடாது என்பதை பிறகு உணர்ந்த பிரம்மா, இழந்த பதவியைப் பெறுவதற்காக, படைப்புத் தொழிலை மீண்டும் பெறுவதற்காக, இங்கே திருப்பட்டூரில் தவம் மேற்கொண்டார்; சிவ பூஜையில் ஈடுபட்டார். சிவ சாபத்துக்கு ஆளான பிரம்மா கடும் தவம் புரிந்த தலம் இது என்கிறது திருப்பட்டூர் ஸ்தல புராணம். ஆதியில் இந்த ஊர் திருப்பிடவூர் என்றும் திருப்படையூர் என்றும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.
மேலும் பிரம்மா பிரதிஷ்டை செய்து வழிபட்ட பனிரெண்டு திருத்தலங்களின் சிவலிங்க மூர்த்தங்களும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருவது சிறப்பு. இதனை, துவாதச லிங்கங்கள் என்று சொல்லுவார்கள். துவாதசம் என்றால் பனிரெண்டு.

இவரின் தவத்தை உணர்ந்த அம்பிகை, சிவபெருமானிடம் பிரம்மாவுக்காக சிபாரிசு செய்தார். அதனால் அம்பாளுக்கு ஸ்ரீபிரம்மசம்பத் கெளரி எனும் திருநாமம் அமைந்தது. சாப விமோசனம் கொடுத்து வரத்தையும் தந்தார் சிவனார். அதனால், சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.

அப்போது பிரம்மாவிடம், ‘இங்கே இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ என்றும் அவர்களின் தலையெழுத்தை திருத்தி சரிசெய்து அருளுக என்றும் உத்தரவிட்டார். அதன்படியே இன்றளவும் நம் தலையெழுத்தைத் திருத்தி அருளுவதற்காக, இங்கே, திருப்பட்டூர் திருத்தலத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் பிரம்மா.

பிரம்மா குடிகொண்டிருக்கும் திருப்பட்டூரில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்ஸவப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோத்ஸவ பெருந்திருவிழா. பத்துநாள் திருவிழாவாக, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

24ம் தேதி மாலை 6 முதல் 7.30 மணிக்குள், ஸ்ரீபிரம்மசம்பத் கெளரிக்கும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சிவ பார்வதியின் திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணார தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.
விழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வு... திருத்தேரோட்டம். 27ம் தேதி சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து திருத்தேர் வடம் பிடிக்கும் வைபவத்திலும் திருக்கல்யாண வைபவத்திலும் கலந்துகொண்டு, பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மசம்பத் கெளரியையும் நம் தலையெழுத்தையே மாற்றி அருளும் பிரம்மாவையும் தரிசிப்போம்.

பிரம்மோத்ஸவம் நடைபெறும் நாட்களில் பிரம்மாவைத் தரிசனம் செய்வது சிறப்பு. குறிப்பாக, குரு பிரம்மாவுக்கு உகந்த வியாழக்கிழமையில் அதுவும் பிரம்மோத்ஸவ காலத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் கோலோச்சும் ஸ்ரீபிரம்மாவை, கண் குளிரத் தரிசிப்போம்; மனம் குளிரப் பிரார்த்திப்போம். நம் பாவங்களையும் கிரகங்களால் உண்டான தோஷங்களையும் போக்கி அருளுவார். பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடச் செய்வார் பிரம்மா என்கிறார் திருப்பட்டூர் கோயிலின் பாஸ்கர் குருக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x