Last Updated : 22 Mar, 2021 05:01 PM

 

Published : 22 Mar 2021 05:01 PM
Last Updated : 22 Mar 2021 05:01 PM

திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் பிரம்மோத்ஸவ விழா; 24ம் தேதி திருக்கல்யாண வைபவம்! 

பிரம்மா குடிகொண்டிருக்கும் திருப்பட்டூரில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்ஸவப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோத்ஸவ பெருந்திருவிழா. பனிரெண்டு நாள் திருவிழாவாக, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

மகாவிஷ்ணு, பிரம்மா, பதஞ்சலி முனிவர், வியாக்ர பாத முனிவர் முதலானோரோல் பூஜிக்கப்பட்டு வழிபடப்பட்டு, வரங்களைப் பெற்ற திருத்தலம் எனும் பேரும் பெருமையும் கொண்டது திருப்பட்டூர் திருத்தலம். திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் சுமார் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகனூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்மசம்பத் கெளரி. இதே கோயிலில், பதஞ்சலி முனிவரின் திருச்சமாதியும் உள்ளது. மேலும் பிரம்மா பிரதிஷ்டை செய்து வழிபட்ட பனிரெண்டு திருத்தலங்களின் சிவலிங்க மூர்த்தங்களும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருவது சிறப்பு. இதனை, துவாதச லிங்கங்கள் என்று சொல்லுவார்கள். துவாதசம் என்றால் பனிரெண்டு.

சிவ சாபத்துக்கு ஆளான பிரம்மா கடும் தவம் புரிந்த தலம். பிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்தார் சிவனார். அதைவிட முக்கியமாக, படைப்புத்தொழிலையே பறித்துக் கொண்டார். கர்வம் கூடாது என்பதை பிறகு உணர்ந்த பிரம்மா, இழந்த பதவியைப் பெறுவதற்காக, படைப்புத் தொழிலை மீண்டும் பெறுவதற்காக, இங்கே திருப்பட்டூரில் தவம் மேற்கொண்டார்; சிவ பூஜையில் ஈடுபட்டார்.

இவரின் தவத்தை உணர்ந்த அம்பிகை, சிவபெருமானிடம் பிரம்மாவுக்காக சிபாரிசு செய்தார். அதனால் அம்பாளுக்கு ஸ்ரீபிரம்மசம்பத் கெளரி எனும் திருநாமம் அமைந்தது. சாப விமோசனம் கொடுத்து வரத்தையும் தந்தார் சிவனார். அதனால், சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது.

அப்போது பிரம்மாவிடம், ‘இங்கே இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ என்றும் அவர்களின் தலையெழுத்தை திருத்தி சரிசெய்து அருளுக என்றும் உத்தரவிட்டார். அதன்படியே இன்றளவும் நம் தலையெழுத்தைத் திருத்தி அருளுவதற்காக, இங்கே, திருப்பட்டூர் திருத்தலத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார் பிரம்மா.

பிரம்மா குடிகொண்டிருக்கும் திருப்பட்டூரில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்ஸவப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோத்ஸவ பெருந்திருவிழா. பனிரெண்டுநாள் திருவிழாவாக, தினமும் காலையும் மாலையும் உத்ஸவம், சிறப்பு பூஜைகள் என விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக இரண்டு விஷயங்களைச் சொல்லுவார்கள். முதலாவது திருக்கல்யாண வைபவம். 24ம் தேதி மாலை 6 முதல் 7.30 மணிக்குள், ஸ்ரீபிரம்மசம்பத் கெளரிக்கும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சிவ பார்வதியின் திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணார தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

விழாவின் இன்னொரு முக்கிய நிகழ்வு... திருத்தேரோட்டம். 27ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேரோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏராளமான பக்தர்கள் வந்து திருத்தேர் வடம் பிடிக்கும் வைபவத்திலும் திருக்கல்யாண வைபவத்திலும் கலந்துகொண்டு, பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மசம்பத் கெளரியையும் நம் தலையெழுத்தையே மாற்றி அருளும் பிரம்மாவையும் தரிசிப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x