Last Updated : 18 Mar, 2021 04:24 PM

 

Published : 18 Mar 2021 04:24 PM
Last Updated : 18 Mar 2021 04:24 PM

பங்குனி கிருத்திகையில் ஞானகுரு முருகனுக்கு வேல் வேல்! 

ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர நாளில் வணங்குவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் ஞானக்குமரன்.

திதியைக் கொண்டு இறைவழிபாடு செய்யலாம். அதேபோல், கிழமைகளைக் கொண்டும் இறைவனை வணங்கலாம். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அதேபோல், நட்சத்திர நாளைக் கொண்டும் அந்தந்த தெய்வங்களை வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். மாதந்தோறும் வருகிற திருவாதிரையில், சிவ வழிபாடு செய்வது உகந்தது. அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில், ஸ்ரீநரசிம்மரையும் உத்திர நட்சத்திர நாளில் ஸ்ரீஐயப்ப சுவாமியையும் தரிசித்து வேண்டிக்கொள்ளலாம்.
திருவோணம் நட்சத்திரம், பெருமாளுக்கு உரிய நாள். மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்த நன்னாளில், விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள்.

கார்த்திகை நட்சத்திரம் என்பது முருக வழிபாட்டுக்கு உரிய நாள். முருகு என்றால் அழகு என்று அர்த்தம். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது இவருக்கு. மேலும் வைகாசி விசாகமும் பங்குனியின் உத்திரமும் தை மாதத்து பூச நட்சத்திரமும் முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஒவ்வொரு மாதமும் வருகிற கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உரிய நாள். கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, வேண்டிக்கொண்டால், இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமை முருகக் கடவுளுக்கு உகந்த நாள். அதேசமயம், வியாழக்கிழமையும் கந்தனுக்கு உரிய நாள் என்றுதான் ஆச்சார்யர்கள் சொல்கிறார்கள். கந்தன் என்றும் கந்தகுரு என்றும் சொல்கிறோம். ஞானவேல் என்றும் ஞானகுரு என்றும் ஞானக்குமரன் என்றும் கொண்டாடுகிறோம்.

குருவுக்கு உகந்தது வியாழக்கிழமை. சுவாமிமலையிலும் திருச்செந்தூரிலும் ஞானகுருவாகவே திகழ்கிறார் முருகப்பெருமான்.
கந்தன் குடிக்கொண்டிருக்கும் ஆலயத்தில், கார்த்திகை நட்சத்திர நாளில் (18ம் தேதி) மாலையில் சென்று முருகப் பெருமானை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்துவோம். சிக்கல்களையும் கவலைகளையும் நீக்கி நல்லனவெல்லாம் தந்தருளுவான் ஞானக்குமரன்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x