Published : 26 Nov 2015 10:52 AM
Last Updated : 26 Nov 2015 10:52 AM

ஆன்மிக நூலகம்: யாமம் பைரவர் ஏத்தும் பொழுது

அனைத்து சிவாலயங்களிலும் சிவபூசை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த சாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. ஆலயத்தின் வடகிழக்கு முனையில் பைரவரும் தென்கிழக்கு முனையில் சூரியனும் அமைத்து வழிபடப்படுகின்றனர். அபூர்வமாகச் சில தலங்களில் பைரவ மூர்த்திக்குத் தனிச் சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம்.

பைரவர் மூன்று கண்களை உடையவர். தலை மீது ஜ்வாலாமுடி விளங்க இதில் அமைந்துள்ள மணிகளால் கோர்க்கப்பட்ட நீண்ட மணிமாலையை அணிந்துள்ளார். மேற்கரங்களில் டமருகம், பாசம், கீழ்க்கரங்களில் சூலம், கபாலம் (இது சமய நூல்களில் நீர்குடிக்க உதவும் பானபாத்திரம் என்று அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை ஏந்தியுள்ளார். பின்புறம் வாகனமான நாய் நிற்கிறது. நிர்வாணக் கோலத்தில் விளங்கும் இவர் இளமையும் வசீகரமும் கொண்டவராக உள்ளார்.

சிவாலயத்தில் மாலையில் பூசை முடிந்ததும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடிச் சாவிகளை அவர் காலடியில் வைப்பது வழக்கம். இந்நாளில் பூசை முடிந்ததின் அடையாளமாக கைமணிகளையும் அபிஷேகக் கலசத்தையும் வைக்கின்றனர்.

பைரவருக்குப் பிரியமானவை நெய் அபிஷேகம், சிவப்பு மலர்கள், நெய் தீபம், உடைக்கப்படாத முழுத்தேங்காய், மாவிளக்கு, நார்ப்பழங்கள், சிவப்பு வண்ணம் தோய்த்த கல்யாணப் பூசணிக்காய், தேன், வடை, அவித்த உணவுகள் முதலியவையாகும். பிரம்மோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டுமெற்று பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.

அபூர்வமாகச் சில தலங்களில் ஆறு, எட்டு கரங்கள் கொண்ட பைரவரைக் காண்கிறோம். பத்து, பதினாறு கரங்களுடன் கூடிய பைரவரும் உள்ளார். சிவாலயங்களில் பைரவர் மேற்கு நோக்கி இருப்பது உத்தமம் என்றும் தெற்கு நோக்கியிருப்பது மத்திமம் என்றும், கிழக்கு நோக்கியிருப்பது அதமம் என்றும் பிரதிஷ்டா நூல்கள் குறிக்கின்றன.

பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்தக் காலத்தில் பராசக்தி பைரவி என்னும் பெயரில் நடமாடுகிறாள். அவளுடன் பெருமான் பைரவனாக வீற்றிருக்கிறார். பரமஞானிகளும் யோகிகளும் தமது தூக்கத்தை விடுத்து அந்த வேளையில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றனர். அபிராமி பட்டர் “யாமம் பைரவர் ஏத்தும் பொழுது” என்று பாடுகிறார். தொடர்ந்து விழிப்புணர்வோடு வேண்டுபவருக்கு, நள்ளிரவில் திருவடி தரிசனம் தருபவள் பைரவி என அருளுவதும் இங்கு எண்ணத்தக்கதாகும். யாமம்- நள்ளிரவு. சீர்காழியில் வடுகநாதருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மகா பைரவர்
பைரவ ஜென்மாஷ்டமி விழா மலர்
எஸ்.நாராயணசுவாமி
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
திருவாவடுதுறை- 609 803
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9487713042

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x