Published : 16 Mar 2021 04:34 PM
Last Updated : 16 Mar 2021 04:34 PM

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் இன்று நடைபெற்ற பங்குனிப் பெருவிழா தேரோட்டம்.

திருச்சி 

திருச்சி, திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூதங்களில் நீருக்குரிய தலமாக விளங்குவது திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் பங்குனிப் பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான பங்குனிப் பெருவிழா பிப்.22-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பங்குனி தேரோட்டத்துக்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் மார்ச் 11-்ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் முதல் தினந்தோறும் சுவாமி, அம்பாள் காலையில் புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று (மார்ச் 15) இரவு தேரோட்டத்துக்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் தெருவடைச்சானில் வீதியுலா வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மார்ச் 16) காலை நடைபெற்றது. இதற்கென அதிகாலையில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.

முன்னதாக, விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 8.05 மணிக்குஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்துஇழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் காலை 9.20 மணிக்கு தெற்கு உள்வீதி சந்திக்கும் இடத்துக்கு வந்தது.

பின்னர் காலை 9.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் பிற்பகல் 2 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் மதியம் 2.15 மணிக்குவடம் பிடித்து இழுக்கப்பட்டு மதியம் 2.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் மதியம் 3.15 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தின் போது மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் 'சிவ, சிவ, ஓம் சக்தி' என்ற பக்தி முழக்கத்துக்கு நடுவே ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள்செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x