எமனிடம் சாவித்திரி கேட்ட மூன்று வரங்கள்!  - காரடையான் நோன்பின் மகத்துவம்

எமனிடம் சாவித்திரி கேட்ட மூன்று வரங்கள்!  - காரடையான் நோன்பின் மகத்துவம்
Updated on
2 min read

திருமணமாகி, கணவனுடன் அற்புதமாக வாழும் சுமங்கலிகள் மட்டுமின்றி கன்னிப்பெண்களும் காரடையான் நோன்பு பூஜையை மேற்கொள்ளலாம். கணவர் ஆயுளுடன் இருக்க வேண்டும், நாம் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்று திருமணமான பெண்கள் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம். அதேசமயம், நல்ல அன்பான, ஒழுக்கமான, பண்பு மிக்க கணவன் கிடைக்கவேண்டும் என்று கன்னியர் இந்த பூஜையை மேற்கொள்ளலாம் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

எமனிடம் சாவித்திரி மூன்று வரங்கள் கேட்டாள். அந்த வரங்கள் ஒவ்வொன்றும் புகுந்த வீட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் கணவருக்கு கெளரவமும் வாழ்க்கையும் தரும் விதமாகவும் அமைந்தன என்று சத்தியவான் சாவித்திரியின் சரிதம் விளக்குகிறது.

ஒரு தேசத்துக்கு ராஜாவாகத் திகழ்ந்தவன் சத்தியவான். இறையருள் கொண்டவளான பூஜைகளிலும் வழிபாடுகளிலும் மிகுந்த ஈடுபாடுகள் கொண்டவளான சாவித்திரியைக் கரம் பற்றினான். மாமனாருக்கும் மாமியாருக்கும் பார்வை இல்லை. எனவே, கணவர், மாமனார், மாமியார் என மூவரையும் கண்ணைப் போல் பார்த்துக் கொண்டாள்.

சோதனைகளையும் கர்ம வினைகளையும் சந்தித்தே ஆகவேண்டும் என்பதுதான் விதி. அதன்படி ராஜ்ஜியத்தை இழந்தார்கள். வனத்துக்குள் குடி போனார்கள். சகல செல்வங்களையும் பதவியையும் தேசத்தையும் இழந்து கானகத்தில் வாழ்ந்தார்க்ள்.

இத்தனை சோகங்களுக்கு நடுவே பெருஞ்சோகம்... சத்தியவானின் ஆயுள் குறைவு என்பதுதான். இவை அனைத்தையும் அறிந்து உணர்ந்த அந்தத் தம்பதி, காட்டில் குடில் அமைத்து சதாசர்வ காலமும் பூஜைகளையும் வழிபாடுகளையும் குறைவறைச் செய்து வந்தார்கள்.

அன்றைக்கும் அப்படித்தான். அம்பாளை பூஜித்துக் கொண்டிருந்தாள் சாவித்திரி. அன்றைய தினத்துடன் சத்தியவானின் ஆயுசும் முடிகிறது. சத்தியவானின் உயிரைப் பறித்தான் எமதருமன். அவனை அழைத்துக் கொண்டு எமலோகம் புறப்பட்டான். இதைக் கண்ட சாவித்திரியும் பின் தொடர்ந்தாள். தன் பக்தியாலும் வழிபாட்டாலும் பூஜையாலும் எவருக்கே தெரியாத எமனின் உருவத்தைக் கண்டாள். அவனைத் தொடர்ந்தாள்.
‘நீ யார்? ஏன் என் பின்னால் வருகிறாய். போய்விடு’ என்றான் எமன். ‘என் கணவனின் உயிரை திரும்ப எடுத்துச் செல்லவே உங்களின் பின்னே வருகிறேன்’ என்றாள் சாவித்திரி. ஒவ்வொரு லோகமாகக் கடந்தார்கள். எமலோகம் வந்தது. வாசல் வரைக்கும்தான் சாவித்திரி வரமுடியும். அதுவரை இத்தனை லோகங்களைக் கடந்து வந்த சாவித்திரியை நினைத்து வியந்து பிரமித்தான் எமன்.

‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றான். ‘என்னுடைய கணவரும் மாமனாரும் மாமியாரும் தேசத்தை, ராஜாங்கத்தை, செல்வத்தை, கெளரவத்தை இழந்து நிற்கிறார்கள். அவை திரும்பக் கிடைக்கவேண்டும்’ என்றாள். ‘ததாஸ்து’ என்றான் எமன். ததாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்.
அடுத்து... ‘மாமனார், மாமியாரின் பார்வை சரியாக வேண்டும்’ என்றாள். அதற்கும் ‘ததாஸ்து, வரம் தந்தேன்’ என்றான். மூன்றாவதாக, ‘எனக்கு உத்தமமான பிள்ளை வரம் கிடைக்க வேண்டும்’ என்று கேட்டாள். ‘ததாஸ்து’ என்று சொல்லிவிட்டு, ‘அவ்வளவுதானே. உன் மூன்று வரமும் கொடுத்துவிட்டேன். திரும்பிப் போ’ என்று எமலோகத்துக்குள் நுழைய எத்தனித்தான் எமதருமன்.

‘எமதருமரே. என் இரண்டு வரங்களைத்தான் தந்தீர்கள். மூன்றாவது வரம் தரவில்லையே. பிள்ளை பாக்கியம் வேண்டுமெனில் கணவர் வேண்டும். அவரை நீங்கள் எமலோகத்துக்குள் அழைத்துச் செல்கிறீர்களே’ என்றாள். திணறிப் போனான் எமன். ‘தர்மபத்தினியே... என் பக்திக்கும் சாதுர்யத்துக்கும் கணவன் மீது மாறாக் காதலுக்கும் முன்னே, என் பதவியும் அதிகாரமும் தூள்தூளாகிவிட்டது. இதோ... உன் கணவரை அழைத்துச் செல்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

கணவர் மீண்டெழுந்தார். மாமனார், மாமியாரின் பார்வை கிடைத்தது. தேசம் கிடைத்தது. செல்வங்கள் வந்தன. ராஜாங்கம் ஆண்டார்கள். கெளரவும் மதிப்பும் அதிகாரமும் கிடைக்கப்பெற்றான் கணவன் சத்தியவான்’ என்கிறது புராணம்.

இப்படி, கணவனை மரணத்தில் இருந்து மீட்டெடுத்த சாவித்திரி செய்த பூஜைதான் காரடையான் நோன்பு. சத்தியவான் சாவித்திரி விரதம் என்பார்கள். சாவித்திரி விரதம் என்பார்கள். கெளரி விரதம் என்பார்கள். காமாக்ஷி விரதம் என்பார்கள். நித்திய சுமங்கலி விரதம் என்பார்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த நோன்பாக விரதமாக போற்றி கொண்டாடப்படுகிறது காரடையான் நோன்பு.

பெண்கள் செய்கிற வழிபாடுகள் ஏராளம் உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமானது காரடையான் நோன்பு என்று விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் கடைசி நாளூம் பங்குனி மாதத்தின் தொடக்க நாளும் கூடுகிற நேரமே காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

திருமணமாகி, கணவனுடன் அற்புதமாக வாழும் சுமங்கலிகள் மட்டுமின்றி கன்னிப்பெண்களும் காரடையான் நோன்பு பூஜையை மேற்கொள்ளலாம். கணவர் ஆயுளுடன் இருக்க வேண்டும், நாம் தீர்க்கசுமங்கலியாக வாழவேண்டும் என்று திருமணமான பெண்கள் வேண்டிக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம். அதேசமயம், நல்ல அன்பான, ஒழுக்கமான, பண்பு மிக்க கணவன் கிடைக்கவேண்டும் என்று கன்னியர் இந்த பூஜையை மேற்கொள்ளலாம் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

காரடையான் நோன்புக்கான நேரம் : 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 முதல் 4.30 மணி வரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in