

இங்கே பிறப்புக்கு கர்மாவே காரணம். இறப்பு வரையிலான விஷயங்களுக்கு கர்ம வினைகளே ஆதாரம். கர்மவினைகளின் தாக்கத்தில் துவளாதீர்கள். கலங்காதீர்கள். நானிருக்கிறேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.
’உனது கர்ம பலன்களில் இருந்தும் நீ செய்த பாவங்களில் இருந்தும் உன்னை முழுமையாக விடுவித்து விட்டேன். உனக்கு வேண்டியதை தகுந்த நேரத்தில் வழங்குவேன். நீ எதிர்பாராமல் இருக்கும் தருணத்தில் நீ நினைத்த சகலமும் உன்னை தேடி வரும்படி செய்வேன்’ என அருளியுள்ளார் பகவான் சாயிபாபா.
’’எனக்கு நீ மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கவில்லை. நீ முக்கியம். உன்னையும் உன்னை சார்ந்தவர்களும் முக்கியம். உன்னுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே முக்கியம். அவர்கள் அனைவரையும் பாதுகாத்து வழிநடத்துவதுதான் என்னுடைய வேலை; அதுவே கடமை’ என்று பாபா அருளியதை விவரிக்கிறது சாயி சத்சரித்திரம்.
நம்பிக்கையோடு இரு உன்னை நிச்சயம் உயர்த்துவேன். பொறுமையாக இரு. நான் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது பொறுமை, நம்பிக்கை எனும் இரண்டுவிஷயங்களைத்தான்! என் குழந்தைகளாகிய நீங்கள், இந்த இரண்டு விஷயங்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
உங்கள் கர்மவினைகள் அனைத்தும் நீங்குவதற்கு பொறுமையாகத்தான் நீங்கள் இருக்கவேண்டும். அவை அனைத்தும் நீங்கிவிடும் என்றும் நான் நீக்கித் தருவேன் என்றும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
உங்களுடன் நானிருக்கிறேன். உங்களின் நிழலாகவே நானிருக்கிறேன். நீங்கள் செல்கிற இடங்களிலெல்லாம் நானும் பின் தொடருகிறேன். உங்களைக் காக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கர்மவினைகள்தான் உங்களின் ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம். நல்லதுகெட்டதுக்கு கர்மவினையே பொறுப்பு. எப்போதோ எந்தப் பிறவியிலோ செய்த பலன்களை இப்போது அனுபவித்தே தீரவேண்டும். அதை அனுபவித்து, அவற்றில் இருந்து விடுபடுவதற்குத்தான் உங்களுக்கு துணையாக நான் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறேன்.
என் பெயரைச் சொல்லி உச்சரிக்கும் போதெல்லாம் நான் ஓடிவந்துவிடுவேன் என அருளியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.
ஓம் சாய்ராம்.