அமாவாசை... சனிக்கிழமை... காகத்துக்கு உணவு! 

அமாவாசை... சனிக்கிழமை... காகத்துக்கு உணவு! 
Updated on
1 min read

மாசி மாதத்தின் அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் முன்னோர்களை வணங்குவோம். முன்னோர்களை வேண்டிக்கொண்டும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்தனை செய்தும் காகத்துக்கு உணவிடுவோம். நம் பாவங்களெல்லாம் காணாமல் போகும். பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரக தோஷங்களை நீக்கி அருளுவார் சனீஸ்வர பகவான்.

மாசி மாதம் என்பது மகத்தான மாதம். மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும். பிரம்மோத்ஸவ விழா நடைபெறும்.

மாசி மாதத்தில் புனித நதிகளிலும் குளங்களிலும் நீராடுவது பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மாசி மாதத்தில் இஷ்ட தெய்வங்களை வணங்குவதும் குலதெய்வங்களை வணங்குவதும் அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை என்பது நம் வழிபாடுகளில் மிக முக்கியமான நாள். அமாவாசை, முன்னோர்களுக்கான நாள் என்றும் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் போற்றுகிறது தர்ம சாஸ்திரம்.

அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு தர்ப்பணம் முதலான சடங்குகளைச் செய்யவேண்டும். பின்னர், அவர்களின் நினைவாக காகத்துக்கு உணவிடுவது நம்முடைய வழக்கம். நாளைய தினம் 13ம் தேதி சனிக்கிழமை அமாவாசை நன்னாள். இந்த நாளானது சனிக்கிழமையுடன் வருவது சிறப்பு மிக்கது.

அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த நாளில், மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்யவேண்டும். பித்ரு காரியங்களை எவரொருவர் தொடர்ந்து முறையே செய்து வருகிறாரோ அவர்களும் அவர்களின் வம்சத்தினரும் பித்ரு சாபத்தில் இருந்தும் பித்ருக்களின் கோபத்தில் இருந்தும் விடுபடுவார்கள் என்றும் பித்ருக்களின் ஆசீர்வாதம் அவர்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள்.
முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதேபோல், சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். சனி பகவான் என்றதும் நாம் பயந்து நடுங்குகிறோம். உண்மையில் சனீஸ்வரர் அருளக்கூடியவர். அவரை முறையே வழிபட்டு வணங்கினால், எண்ணற்ற நன்மைகளைத் தந்தருளுவார்.

சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். எனவே நம் முன்னோர்களை வேண்டிக்கொண்டும் சனீஸ்வர பகவானைப் பிரார்த்தனை செய்தும் காகத்துக்கு உணவிடுவோம். நம் தீய வினைகள் அனைத்தையும் களையச் செய்து அருளுவார் சனீஸ்வர பகவான். கிரக தோஷங்கள் அனைத்தையும் நீக்கியருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்த நன்னாளில், சனீஸ்வர காயத்ரி சொல்லுவோம். காகத்துக்கு உணவிடுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in