மகா சிவராத்திரி; நான்கு கால பூஜைகள்; தானம் செய்வோம்!

மகா சிவராத்திரி; நான்கு கால பூஜைகள்; தானம் செய்வோம்!
Updated on
1 min read

மகா சிவராத்திரி நன்னாளான இன்றைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமையில், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்வோம். அபிஷேகப் பொருட்களும் வில்வமும் செவ்வரளி முதலான மலர்களும் சமர்ப்பித்து வேண்டுவோம். பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நம்மால் முடிந்த தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை முதலான உணவை தானமாக, பிரசாதமாக வழங்கினால், நம்மை பீடித்துள்ள சகல துன்பங்களும் தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மகத்துவம் மிக்க வழிபாடு என்று போற்றப்படுகிறது மகா சிவராத்திரி. மாசி மாதம் விசேஷம். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

அம்பிகைக்கு நவராத்திரி, அப்பன் சிவனுக்கு ஒரு ராத்திரி, அது சிவராத்திரி என்பார்கள். மகா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களைச் சேர்க்கும், பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.

மகா சிவராத்திரி நாளில், இரவில் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் எப்போதும் இரவு 8 முதல் 9 மணிக்குள் நடை சார்த்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவதும் எண்ணற்ற சத்விஷயங்களைக் கொடுக்கும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மகா சிவராத்திரி நன்னாளும் குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையும் இணைந்து வருவது இன்னும் சிறப்புமிக்கது. முதல் கால பூஜையானது மாலை 6.15 முதல் இரவு 9.15 மணி வரையிலான காலம். இப்போது சிவலிங்கத் திருமேனிக்கு 16 வகை அபிஷேகங்களும் ஆராதனைகளும் சிறப்புற நடைபெறும்.

அடுத்து இரண்டாவது கால பூஜையானது, இரவு 915 முதல் இரவு 12.20 வரையிலான காலம். இந்தத் தருணத்தில் நள்ளிரவில் பூஜைகள் நடைபெறும். இரவு 12.20 முதல் அதிகாலை 3.20 மணி வரையிலான காலம் மூன்றாவது கால பூஜைக்கான காலம். இப்போதும் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரங்கள் என அமர்க்களப்படும்.

இதையடுத்து அதிகாலை 3.20 முதல் விடியற்காலை 6.25 மணி வரை நான்காம் கால பூஜைகள் நடைபெறும்.

மகா சிவராத்திரி நன்னாளான இன்றைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமையில், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்வோம். அபிஷேகப் பொருட்களும் வில்வமும் செவ்வரளி முதலான மலர்களும் சமர்ப்பித்து வேண்டுவோம். பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நம்மால் முடிந்த தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை முதலான உணவை தானமாக, பிரசாதமாக வழங்கினால், நம்மை பீடித்துள்ள சகல துன்பங்களும் தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அப்பன் சிவனின் அருளைப் பெறுவோம். ஆனந்தமாக வாழ்வோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in