

’அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிறரின் நலனுக்காக, என்னிடம் எப்போதெல்லாம் பிரார்த்தனை வைக்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களின் கவலைகளில் இருந்தே காப்பதே என் கடமை’ என்கிறார் சாயிபாபா. பகவான் சாயிபாபா அருளியது போல், அடுத்தவருக்காக பிரார்த்தனைகளைச் செய்வோம். பாபாவிடம் பிறரின் நலனுக்காகவே கோரிக்கைகள் வைப்போம்!
’உங்கள் வாழ்க்கையில் உங்களை ஆட்சி செய்யும் பெரிய விஷயம் என்பது உங்களின் மனமும் புத்தியும்தான். உங்களுடைய மனமானது சஞ்சலம் இல்லாமல் இருக்கவேண்டும். புத்தி நல்லனவற்றைச் சிந்திக்கவேண்டும். இந்த இரண்டும் மிக மிக முக்கியம்!’ என்கிறார் பகவான் சாயிபாபா.
சஞ்சலமில்லாத மனம்தான் நமக்கு இருக்கிற பிரச்சினைகளையெல்லாம் கூர்ந்து கவனிக்கவைக்கும். நம் கவலைகளோ சிக்கல்களோ மட்டுமின்றி அடுத்தவர் பிரச்சினைகளையும் கவலைகளையும் அக்கறையுடன் மனம் சிந்திக்கும். அப்படி அடுத்தவருக்காக மனம் சிந்திக்கத் தொடங்குகிற போது, புத்தியில் அவர்களுக்கான செயல்பாடுகளும் பிரார்த்தனைகளும் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
என்னுடைய அன்பர்கள் அப்படித்தான், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் உற்றாருக்காகவும் நண்பர்களுக்காகவும் பிரார்த்தனைகளை என்னிடம் முன்வைக்கிறார்கள். அவர்கள் யாருக்காகவோ வேண்டிக்கொள்கிறார்கள். நான் அவர்கள் வேண்டாத கோரிக்கைகளையும் அவர்களுக்காக நிறைவேற்றித் தருகிறேன்’ என பகவான் சாயிபாபா தெரிவித்துள்ளார் என்பதை, சாயி சத் சரித்திரம் விவரிக்கிறது.
தெய்வங்களும் மகான்களும் அப்படித்தான். நாம் பிறருக்காக பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருந்தால், பகவான் சாயிபாபா நமக்கு உடனே அருள்மழையைப் பொழிவார். தெய்வ சந்நிதிகளில் நாம் நம் பிரார்த்தனைகளை முறையிடுவதை விட, அடுத்தவரின் கவலைகளையும் துக்கங்களையும் சொல்லி அவர்களுக்கு நம் வேண்டுதல்களையெல்லாம் சொல்லிப் பிரார்த்தனைகள் செய்வோம்.
அதேபோல், பாபாவிடம் நமக்காக என்று எதுவும் வேண்டத் தேவையில்லை. ‘எனக்கு இது வேண்டும், என் குடும்பத்துக்கு இது வேண்டும்’ என்றெல்லாம் பிரார்த்தனையில் வைக்க வேண்டாம். அடுத்தவர் நலனுக்காக நாம் மனம் குவித்து பிரார்த்தனைகள் செய்வதைத்தான் பாபா விரும்புகிறார்.
சஞ்சலம் இல்லாத மனமும், புத்தியில் நற்சிந்தனைகளும் வளர்த்துக் கொள்வதே முக்கியம். இதை பக்தியாலும் மூச்சுப் பயிற்சியாலும் சாத்தியமாக்கிக் கொள்ளுங்கள். பரோபகாரத்தாலும் அடுத்தவரிடம் நீங்கள் செலுத்துகிற நேசத்தினாலும் இந்த நற்குணங்கள் உங்களை இன்னும் இன்னுமாக வளப்படுத்தும். பிறருக்காக என்னுடன் பேசுங்கள். அடுத்தவரின் நலனுக்காக என்னுடன் உரையாடுங்கள். உங்கள் கவலைகளையும் கோரிக்கைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் சரி செய்துவிடுவேன்’ என்கிறது சாயி சத்சரித்திரம்.
பகவான் சாயிபாபா அருளியது போல், அடுத்தவருக்காக பிரார்த்தனைகளைச் செய்வோம். பாபாவிடம் பிறரின் நலனுக்காகவே கோரிக்கைகள் வைப்போம்!