புதன்... பிரதோஷம்... நரசிம்மர் வழிபாடு! 

புதன்... பிரதோஷம்... நரசிம்மர் வழிபாடு! 
Updated on
1 min read

புதன்கிழமையும் பிரதோஷமும் இணைந்து வரும் அற்புத நன்னாளில், ஸ்ரீநரசிம்மரை மனதார வழிபடுவோம். அருகில் உள்ள நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று தரிசித்து பிரார்த்திப்போம்.

பிரதோஷம் என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாள். ஒவ்வொரு மாதமும் அமாவாசக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு முன்னதாகவும் திரயோதசி திதியானது வரும். இந்த திரயோதசி திதி நாளையே பிரதோஷம் என்கிறோம்.

பிரதோஷத்தில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடந்தேறும்.
ஒவ்வொரு கிழமைகளில் வருகிற பிரதோஷமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கியமாக, சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் பிரதோஷம் வருவதும் சனிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் உன்னதப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.

சைவ வழிபாட்டில் மட்டும் பிரதோஷம் முக்கியத்துவம் வாய்ந்ததா என்றால் இல்லை. வைஷ்ணவத்திலும் பிரதோஷம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில், பிரதோஷத்துக்கு தொடர்பு கொண்ட அவதாரமாகத் திகழ்வது ஸ்ரீநரசிம்ம அவதாரம். இருக்கும் அவதாரங்களில், நரசிம்மரின் அவதாரம்தான், குறைந்த காலகட்டத்திலானது. சொல்லப்போனால், குறைந்த நேரத்தில் அவதரித்தது என விவரிக்கிறது புராணம்.

காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல் இருக்கும் நேரத்தில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. வீட்டுக்கு உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல் வாசலில் நிகழ்ந்தது நரசிம்ம அவதாரம். மனித உருவாகவும் இல்லாமல், மிருக உருவாகவும் இல்லாமல், மனித உடலும் சிங்க முகமும் கொண்டு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம்.

அப்படி சில மணித்துளிகளில் நிகழ்ந்த அவதாரம், ஒரு பிரதோஷத்தில், பிரதோஷ வேளையில் அமைந்தது என்கிறது நரசிம்ம அவதாரம்.
எனவே, பிரதோஷம் என்பதும் பிரதோஷ வேளை என்பதும் சிவனுக்கு உரிய முக்கியமான பூஜைக்கு உரிய நாள் என்பது போலவே, நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த முக்கியமான நாள்.

ஆகவே, பிரதோஷத்தின் போது சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது போல, வைஷ்ணவ திருத்தலங்களில் நரசிம்மருக்கும் பூஜைகள் நடைபெறும். நரசிம்மரை பிரதோஷத்தன்று தரிசிப்பது இன்னும் இன்னுமாக மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குறிப்பாக, புதன்கிழமை நரசிம்மருக்கு விசேஷம். புதன்கிழமை அன்று வரும் பிரதோஷம் என்பது இன்னும் மகத்துவம் மிக்க நாள். 10ம் தேதி புதன்கிழமையும் பிரதோஷமும் இணைந்திருக்கும் நாளில், அருகில் உள்ள வைஷ்ணவ தலத்துக்கும் செல்வோம். நரசிம்மரின் சந்நிதிக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வோம். முடிந்தால் பானக நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம்/. துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவார் நரசிம்ம பெருமாள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in