

மனிதக் குலத்துக்குத் தன்னையே விருந்தாக அளித்தவர் இறைமகன் இயேசு. யூதர்களின் முக்கியப் பண்டிகையான பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்விதமாகத் தன் சீடர்களுடன் உணவருந்த அமர்ந்தார். அது கி.பி. 33-ம் ஆண்டு. நிசான் மாதம் 14-ம் தேதி.
அந்த இரவு உணவு வேளையில் வானில் முழு நிலா காய்ந்துகொண்டிருந்தது. இயேசு பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை விடுதலைசெய்து அழைத்து வந்தார் யகோவா. அடிமைத் தளையிலிருந்து மீண்ட அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் வகையிலேயே இஸ்ரவேல் மக்கள் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடினர்.
தன்னைச் சுற்றி அமர்ந்திருந்த சீடர்களுக்கு பாஸ்கா விருந்தின் மூலம் தன் உடலும் ரத்தமும் மற்றவர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய ‘ஜீவ உணவு’ என்பதை முக்கியச் செய்தியாக விட்டுச்செல்ல நினைத்தார்.
உங்களுக்கானது எனது உடல்
இயேசு கோதுமை அப்பத்தை எடுத்து பரலோகத் தந்தையைப் போற்றிய பின், அதைப் பிட்டுத் தன் சீடர்களுக்கு கொடுத்து, “அனைவரும் இதைப் பெற்று உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் எனது உடல்” என்றார். பின்னர் திராட்சை ரசம் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்திய பின் அவர்களுக்குக் கொடுத்து, “இதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் பாவ மன்னிப்புக்காக உங்களுக்காகவும் எல்லோருக்காவும் சிந்தப்படும் என் இரத்தம்”என்றார்.
பாஸ்கா பண்டிகையில் சீடர்களுடன் உண்ட அந்த விருந்தே பூமியில் அவரது கடைசி விருந்தாக இருந்தது. அதன் பிறகு அவரே மீட்பு தரும் புனித விருந்தாக மாறி மனித குலத்துக்குத் தன் இன்னுயிரை ஈந்தார். அப்படிப்பட்டவர் ‘விருந்து’ என்ற அடையாளத்தின் மூலம் ஊட்டிய போதனைகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
விருந்துண்ணும் இடம்
யூத அதிகார வர்க்கத்தில் முதன்மை பெற்றிருந்த பரிசேயர்களின் தலைவர் ஒருவனுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிடச் சென்றிருந்தார் இயேசு. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அடித்துப்பிடித்து முதன்மையான இடங்களைத் தேர்ந்தெடுப்பதை இயேசு கவனித்தார். அப்போது அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்: “யாராவது உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், முதன்மையான இடத்தில் போய் உட்காராதீர்கள்.
ஏனென்றால், உங்களைவிட மதிப்புமிக்க நபரும் அழைக்கப்பட்டிருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று கேட்பார். அப்போது, நீங்கள் வெட்கத்தோடு கூனிக் குறுகி கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். எனவே நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், கடைசி இடத்தில் போய் உட்காருங்கள்; அப்போது உங்களை அழைத்தவர் வந்து, ‘நண்பரே, முதன்மையான இடத்தில் போய் உட்காருங்கள்’ என்று சொல்வார்.
அப்போது, மற்ற விருந்தினர்கள் முன் உங்களுக்குக் கெளரவமாக இருக்கும். தன்னைத் தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்”(லூக்கா 14:8-11)என்றார்.
விருந்துக்கு யாரை அழைப்பது?
பிறகு, தன்னை விருந்துக்கு அழைத்த பரிசேயர் தலைவனைக் கனிவுடன் அருகில் அழைத்த அவர், “ நீங்கள் விருந்தை அளிக்கும்போது, உங்கள் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ அக்கம்பக்கத்திலுள்ள பணக்காரர்களையோ அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் ஒருவேளை பதிலுக்கு அவர்களும் உங்களை எப்போதாவது அழைக்கலாம்.
அது உங்களுக்குச் செய்யப்படுகிற கைமாறாகிவிடும். அதனால் விருந்து அளிக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமுற்றவர்களையும், கால் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையுமே அழையுங்கள்; அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலின்போது உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்”(லூக்கா 15:12-14 )என்றார்.
“உளப்பூர்வமான அழைப்பை நிராகரித்த எவரும் நான் அளிக்கிற விருந்தைச் சாப்பிடப்போவதில்லை என்று நான் உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்” என்றார் இயேசு.
அவர் காட்டிய வழியில் அவரது விருந்து படைக்க நீங்கள் தயாரா?