

மகா சிவராத்திரி நாளில், இரவில் கண்விழித்து, 1008 முறை நமசிவாயம் சொல்லி சிவபெருமானை தரிசித்து வணங்கினால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம். பாவங்கள் அனைத்தும் விலகும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி. குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், மகா சிவராத்திரி நன்னாளில், நமசிவாயம் சொல்லி தென்னாடுடைய சிவனாரைத் தரிசிப்போம்.
சிவனாருக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி என்பார்கள். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வருவதை மகா சிவராத்திரி என்பார்கள். எல்லா நாளும் வில்வம் வழங்கி சிவனாரை தரிசித்தாலும் மகா சிவராத்திரி திருநாளில், சிவபெருமானுக்கு ஒரேயொரு வில்வம் சார்த்தினாலே மகா புண்ணியம் என்கிறது சிவபுராணம்.
மகா சிவராத்திரி எனும் புண்ணியத் திருநாளின் மகிமைகளை சிவனார் நந்திதேவரிடம் சொன்னார். நந்திதேவர், இந்திரன் முதலான தேவர்களிடம் முனிவர்களிடமும் தெரிவிக்க, அதையடுத்து சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளாத தெய்வங்களே இல்லை என்று சொல்லலாம்.
முருகப்பெருமான், சிவபெருமானை நினைத்து, மகா சிவராத்திரியின் போது கடும் தவம் மேற்கொண்டார். வரங்கள் பெற்றார் என்கிறது புராணம். இதேபோல், எம தருமன், மகா சிவராத்திரி விரத மகிமையை அறிந்து, அன்றைய நாளில் சிவபூஜைகள் மேற்கொண்டார்; வரம் பெற்றார் என விவரிக்கிறது புராணம்.
மேலும், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு, தவமிருந்து பூஜைகள் செய்தனர். இந்த தவத்தின் பலனாலும் பூஜையின் பலனாலும் எண்ணற்ற வரங்களையும் சிவனருளையும் பெற்றனர் என சிலாகிக்கிறது புராணம்.
இப்படியான மகத்துவங்களைக் கொண்டது மகா சிவராத்திரி. மாசி மாதம் எனும் வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உரிய மாதத்தில், மகா சிவராத்திரி எனும் புண்ணியத் திருநாளில், இரவில் விடிய விடிய நடைபெறும் சிவ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். சிவாலயத்தில் அமர்ந்தபடி 1008 முறை நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சித்தமெல்லாம் சிவனாரை நினைத்து மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலைக் கடக்கச் செய்வார் சிவனார். பாவங்கள் போக்கி அருளுவார். புண்ணியங்களைத் தந்து காத்தருளுவார்.
11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி. குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், மகா சிவராத்திரி நன்னாளில், நமசிவாயம் சொல்லி தென்னாடுடைய சிவனாரைத் தரிசிப்போம்.
நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!