சாயிபாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்; வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் பாபா!

சாயிபாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்; வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் பாபா!
Updated on
2 min read

கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாக எத்தனையோ மகான்கள் அவதரித்துள்ளனர். அவர்கள், நமக்கெல்லாம் குருவாக இருந்து நம்மை வழிநடத்தி வருகின்றனர். வாழ்க்கைக்கு பாதை அமைத்துக் கொடுத்து வருகிறார்கள். பாதையாகவே இருந்து நமக்கு அருளி வருகிறார்கள். அப்படியான மகான்களில் ஒருவர்தான் பகவான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா எனும் உன்னத மகான், வாழ்க்கையைக் கடப்பது என்பது கர்மாவைக் கடப்பது என்கிறார். மேலும் இந்த வாழ்க்கைக்கான போதனைகளாக மிகப்பெரிய விஷயங்களையெல்லாம் எடுத்துரைக்கவில்லை. மிக எளிமையான, இலகுவான விஷயங்களையே உபதேசித்துள்ளார்.

ஷீர்டி எனும் சிறிய கிராமத்தில் இருந்துகொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பாபா அருளியவற்றில் மிக முக்கியமானவை... நம்பிக்கை, பொறுமை. எவரொருவர் தன் வாழ்வில் நம்பிக்கையையும் பொறுமையையும் கொண்டு செயல்படுகிறார்களோ... அவர்கள் ஒருபோதும் நிம்மதியை இழப்பதில்லை. கர்வ சிந்தனைகளிலோ அடுத்தவரைக் காயப்படுத்துவதிலோ ஒருபோதும் இறங்கமாட்டார்கள் என்கிறது சாயி சத்சரித்திரம்.

மேலும் பகவான் ஷீர்டி சாயிபாபாவின் பக்தர்களில் மிக முக்கியமானவர் லக்ஷ்மி பாய். இவரை தன் மகளைப் போலவே பாவித்தார் பாபா. ஒருநாள்... பகவான் சாயிபாபா, மகள் லக்ஷ்மிபாய்க்கு, ஒன்பது நாணயங்களை வழங்கினார். பாபா அப்படித்தான் சொல்லுகிறார்.

‘இவை நாணயங்கள். நாணயங்களென்றால் காசோ பணமோ அல்ல. ஒழுக்கங்கள். நன்னெறிகள். பாபா மிக எளிமையாக வழங்கிய அருளுரைகள். லக்ஷ்மி பாய்க்கு வழங்குவதாகச் சொல்லி, உலகத்தின் சகல மக்களுக்காகவும் வழங்கப்பட்ட நாணயங்கள் அவை.

பாபா வழங்கிய அந்த ஒன்பது நாணயங்கள் :
1. அகங்காரமின்மை. அகங்காரம், கர்வம், அலட்டல் இல்லாமல் இருக்கவேண்டும்.
2. பொறாமை. எவரிடமும் எக்காரணத்தைக் கொண்டும் பொறாமை உணர்வுடன் இருக்காதீர்கள். எவரைப் பார்த்தும் எதற்காகவும் பொறாமப் படாதீர்கள்.
3. இடைவிடாத பக்தி மற்றும் சேவை. பக்தி என்பதும் சேவை என்பதும் வேறு வேறு அல்ல. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் இருப்பவையும் அல்ல. சதாசர்வ காலமும் கடவுளின் மீது பக்தியும் சக மனிதர்களுக்குச் சேவையும் செய்துகொண்டே இருங்கள். இடைவிடாமல் கடவுளை நினைத்துக் கொண்டே இருங்கள். உங்கள் கர்மவினைகளைக் களைவதற்கும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கும் பக்தியும் சேவையுமே முக்கியமான வழிகள்.
4. பற்றற்றிரு. எதன் மீதும் பற்று வைக்காதீர்கள். பொன்னின் மீது பொருளின் மீது படாடோபங்களின் மீது ஆடை ஆபரணங்கள் மீது என எதன் மீதும் பற்று வைக்காதீர்கள். எதன் மீது ஆசைப்படுகிறோமோ அவை கிடைப்பதில் தாமதமானாலோ கிடைக்காமலே போனாலோ அவை பெருந்துக்கமாகிவிடும். ஆசை நிறைவேறாத போதுதான், பொறாமையும் கர்வமும் தலைதூக்கும்.
5. குருவின் மேல் முழு நம்பிக்கை. நீங்கள் யாரை குருவாக ஏற்றுக் கொண்டீர்களோ அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களின் கர்மாவை தொலைப்பதற்கு குருவின் அண்மையும் அருளும் அவசியம். எனவே குருவின் மிது முழு நம்பிக்கை வையுங்கள்.
6. அமைதியான இயல்பு. இயல்பாக இருங்கள். அமைதியாக இருங்கள். அமைதியையே இயல்பாக்கிக் கொள்ளுங்கள். இயல்பான அமைதி இருந்தால், அந்த அமைதி பேரமைதியை நோக்கிக் கொண்டு செல்லும். இயல்பற்ற அமைதியாக இருந்தால், அப்படியான அமைதியே அலட்டலைக் கொடுக்கும். கர்வத்தைக் கொடுக்கும்.
7. உண்மையைக் கண்டறிதல். உண்மையை அறிந்து கொள்ள முயலுங்கள். உண்மையை விரும்புங்கள். உண்மையாக இருப்பதில் உள்ள இன்பத்தை உணருங்கள். உண்மைதான் சத்தியம். உண்மையின் பக்கம் இருந்தால், நீங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பீர்கள். சத்தியத்தின்படி இருந்தால், கடவுளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
8. பகை பாராட்டாதீர்கள். பகையில் நல்ல பகை, கெட்ட பகை என்றெல்லாம் இல்லை. பகை என்றாலே வீண்பகைதான். தேவையற்ற பகையுடன் இருந்தால் பொறுமையாகவும் இருக்கமுடியாது. நிதானத்தைக் கைக்கொள்ளவும் முடியாது. எனவே எவரிடமும் எள்முனையளவும் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
9. பிறர் மீது குறை பார்க்காதீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது, அவர்களின் குறைகளைச் சொல்லவே சொல்லாதீர்கள். குறைகளின்றி எவருமில்லை. குறைகளையெல்லாம் லென்ஸ் வைத்து பார்க்கத் தொடங்கினார்ல், அவர்களிடம் இருக்கிற நிறை, ஒருபோதும் நமக்குத் தெரியாமலே போய்விடும்.
எனவே அடுத்தவரின் குறைகளை எப்போதும் தோண்டித்துருவி பார்த்துக் கொண்டே இருப்பது நம்முடைய முன்னேற்றத்தையும் தடுக்கும். குறைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கிற போது பரஸ்பரம் புரிந்துகொள்வதோ அறிந்துகொள்வதோ அன்பு பாராட்டுவதோ இல்லாமல் போய்விடும்.
இவையே ஒன்பது நாணங்கள். இதைக் கடைப்பிடித்து வந்தால்தான் குருவருளும் திருவருளும் கிடைக்கும் என சாயிபாபா அழகுற விளக்கியுள்ளார்.
இந்த ஒன்பது நாணயங்கள்தான், கர்மவினைகளைத் தீர்க்கும் பொக்கிஷ வரிகள். வாழ்வியல் கோட்பாடுகள் என்பதை வலியுறுத்தியுள்ளார் ஷீர்டி சாயிபாபா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in