

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டு, உரிய மந்திரங்கள் சொல்லி பிரார்த்தனை செய்தால், நம் எதிரிகளையெல்லாம் பலமிழக்கச் செய்வாள் என்றும் நமக்கு வேண்டும் வரங்களைத் தந்து, நம் வாழ்வை வளமாக்குவாள் என்றும் விவரிக்கின்றனர் ஆச்சார்யர்கள்.
சப்தமாதர்களில் ஒரு தேவதையாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. சொல்லப்போனால், சப்த மாதர்களில் மிக முக்கியமான தேவதையாகவும் மகா வலிமை பொருந்தியவளாகவும் போற்றப்படுகிறாள் ஸ்ரீவாராஹி தேவி.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில்தான், சப்தமாதர்களுக்கு ஆலயங்களில் சந்நிதி அமைக்கப்பட்டது வழக்கமாக இருந்ததாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பன்றி முகமும் மனித உடலும் கொண்ட வாராஹியை பஞ்சமி திதியில் வழிபட்டால், வெற்றிக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லை என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். .
காலப்போக்கில், சப்தமாதர்கள் சந்நிதியும் குறிப்பாக வாராஹிக்கென்று சந்நிதியும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், வாராஹிதேவிக்கென தனிக்கோயிலே அமைக்கப்பட்டு, வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள்.
அருகில் உள்ள ஆலயங்களில் சப்தமாதர்கள் சந்நிதி இல்லாவிட்டாலும் வாராஹிக்கு சந்நிதி இல்லாது போனாலும் வீட்டில் இருந்தபடியே வாராஹிதேவியின் மூலமந்திரத்தை 108 முறை ஜபித்து மனம் குவித்துப் பிரார்த்தனை செய்வது சகல பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது என்றும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமையை மேம்படுத்தும் என்றும் இல்லத்தில் இருந்த தீயசக்தியை விரட்டியடுத்து அருளுவாள் வாராஹி என்றும் போற்றுகின்றனர் வாராஹி வழிபாட்டுக் குழு பக்தர்கள்.
சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி மஹாத்மியம் சிலாகித்துச் சொல்கிறது. சப்த என்றால் ஏழு. ஏழு தேவியரைக் கொண்டதால் சப்தமாதர்கள் என்று பெயர். இவர்களை 700 மந்திரங்களால் விவரித்துச் சொல்லப்பட்டிருப்பதால் அதற்கு சப்த சதீ என்றே விவரிக்கிறது புராணம்.
பஞ்சமி திதியில், வாராஹி மூலமந்திரத்தையும் வாராஹி காயத்ரியையும் பாராயணம் செய்து வழிபடுவோம். செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டி வணங்குவோம். நம் எதிரிகளை பலமிழக்கச் செய்து அருளுவாள் தேவி. நம் துக்கத்தையும் வாட்டத்தையும் போக்கி அருளுவாள் அன்னை. வாழ்வுக்கு வழியையும் வளத்தையும் கொடுத்துக் காப்பாள் வாராஹி நாயகி!
3ம் தேதி புதன்கிழமை, பஞ்சமி திதி. இந்தநாளில் வாராஹி தேவியை மனதாரத் துதிப்போம். நம் பிரார்த்தனைகளை அவளின் திருவடியில் சமர்ப்பிப்போம்!