

மாசி சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், ஆனைமுகனைத் தரிசிப்போம். அருகம்புல் மாலை சார்த்தி மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை நடத்தித் தருவார். மாங்கல்ய பலம் தந்திடுவார். மங்காத செல்வத்தை வழங்கிடுவார், பிள்ளையாரப்பன்.
எத்தனையோ தெய்வங்கள் உண்டு. அந்த தெய்வங்களை வணங்குவதற்கு பலப்பல வழிபாடுகள், முறைகள், நியமங்கள் இருக்கின்றன. அதேசமயம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அப்படி வணங்கும் போது, முதலில் பிள்ளையாரை வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
அதனால்தான் விநாயகப் பெருமானை, முழுமுதற் கடவுள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். ஆலயங்களின் ஆகமப்படியும் கோயில்களில், முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு அடுத்தடுத்த தெய்வங்களை வணங்குவதற்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல், சாஸ்திர ரீதியாகவும் எந்த ஹோமங்கள் யாகங்கள் செய்தாலும், முதலில் பிள்ளையாருக்கு உண்டான வழிபாட்டைச் செய்துவிட்டுத்தான் அடுத்தடுத்த பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.
மந்திர ரீதியாகவும் நாம் எந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் முதலில் கணபதி மந்திரத்தை உபதேசமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின்னர் ஏனைய மந்திரங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
இப்படி எல்லா வகையிலும் முதற்கடவுளாகத் திகழும் பிள்ளையாருக்கு சதுர்த்தசி திதி என்பது ரொம்பவே விசேஷமானது. மாதந்தோறும் வருகிற சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்குவதும் வழிபடுவதும் ஆராதனைகள் மேற்கொள்வதும் மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாதம் என்பது ஜபதபங்கள் செய்வதற்கு உண்டான அற்புதமான மாதம். மாசி மாதத்தில்தான் ஆலயங்கள் பலவற்றிலும் பிரம்மோத்ஸவ விழாவும் மாசிப் பெருவிழாவும் தீர்த்தவாரிப் பெருவிழாவும் நடைபெறும்.
மாசி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி இன்னும் இன்னுமாக பலன்களை நமக்குத் தரக்கூடிய சிறப்பு மிக்க நாள். இன்று 2ம் தேதி செவ்வாய்க்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், மாலையில் விநாயகருக்கு தீபமேற்றுங்கள். அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவது கிரக தோஷங்களையெல்லாம் போக்கி நம்மை மேன்மையுற வாழச் செய்வார் விநாயகப் பெருமான்.
சுண்டல் அல்லது கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ஆனைமுகனை வழிபடுவோம். சங்கடங்கள் தீரும். சந்தோஷம் பெருகும்!