

அந்தப் பெண் ஜாம்பவானுடைய புத்ரிதான். அப்பாவின் பெயரையொட்டி அவளுக்கு ஜாம்பதி என்று பெயர். ‘யாருமே வர முடியாததாக அப்பா அமைந்திருக்கிற குகை வீட்டுக்குள் இந்த லாவண்யமூர்த்தி வந்துவிட்டாரே, அப்பா கோபித்துக்கொண்டு இவரை என்ன பண்ணிவிடுவாரோ?’ என்று பயப்பட்டாள்.
அந்தச் சமயத்தில் ஜாம்பவான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால் ஜாம்பதி ரகசியக் குரலில் கிருஷ்ணரிடம், அவர் யார், என்ன காரியமாக வந்திருக்கிறாரென்று சுருக்கமாகப் பதில் சொல்லும்படி கேட்டாள். பகவான் அப்படியே சொன்னார்.
உடனே அவள், “இங்கே நீங்கள் வந்ததற்கே என் பிதா கோபப்படுவார். சயமந்தகத்தை வேறே நீங்கள் யாரோ ஒருத்தருக்காக எடுத்துக்கொண்டுபோக நினைக்கிறீர்களென்று அவருக்குத் தெரிந்தால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்ட மாதிரி ஆகும். அதனால் இப்போதே நீங்கள் சத்தம் செய்யாமல் அதைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடுங்கள்” என்றாள்.
அவரைப் போகச் சொல்வதற்கு அவளுக்கு மனசு இல்லைதான். இருந்தாலும் அப்பாவால் அவருக்கு ஹானி உண்டாகிவிடப்போகிறதே என்பதால், அவரிடம் கொண்ட பிரேமையாலேயே உண்டான தியாக எண்ணத்தில் இப்படிச் சொன்னாள்.
பகவானிடம் பிரேமை கொண்ட ஒரு பெண், ருக்மிணி தன்னையே அவர் எடுத்துக் கொண்டு ஓடிப்போய்விட வேண்டுமென்று தூது அனுப்பினாள். இந்தப் பெண்ணோ ஸ்திரீகளுக்கு இருக்கிற நகை ஆசையைக்கூட விட்டுவிட்டு, லேசிலே கிடைக்காத திவ்யமணியை அவர் எடுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டாள்.
பகவானானால் ரகசியத்தைக் காப்பாற்றாமல் கலகலவென்று சிரித்தார். “போதும் போதும், எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிற திருட்டுப் பட்டங்கள். ஒன்று அவரே சயமந்தகத்தை இஷ்டப்பட்டுத் தரட்டும். அல்லது அவருடன் நேரே யுத்தம் பண்ணி ஜெயித்து அதை எடுத்துக்கொண்டு போகிறேன்” என்றார்.
“அப்பா குணம் எனக்குத் தெரியும். ‘கரடிப்பிடி’ என்று அவர் தமக்குக் கிடைத்த பண்டத்தைக் கொடுக்கவே மாட்டார். அதுவும் வயசுக் காலத்தில் பிறந்த செல்லக் குழந்தைக்காக அவர் சம்பாதித்து வந்திருக்கும் அபூர்வமான மணியை ஒருநாளும் இஷ்டப்பட்டுக் கொடுக்கமாட்டார். ஆனதினால், நீங்கள் நேர்வழியில்தான் வாங்கிக் கொள்வீர்களென்றால், அவருக்கு முன்னால் கைநீட்டி யாசித்துத் தோற்றுப்போக வேண்டாம். யுத்தத்திலேயே ஆரம்பியுங்கள்” என்றாள் ஜாம்பவதி. அவருடைய மான அவமானங்களில் தனக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிற அளவுக்கு அவரிடம் சுத்தமான பிரேமை உண்டாகியிருந்தது.
உடனே இதுவரையில் இந்தக் கதையில் ஊர் அபவாதத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு சோப்ளாங்கி மாதிரியிருந்த பரமாத்மா மகா கம்பீரமாகச் சங்கையெடுத்து ‘பூம் பூம்’ என்று கோஷம் பண்ணினார்.
சயமந்தகத்தின் கதை
‘சயமந்தகமணி உபாக்யானம்’ என்ற பெயரைக் கேட்டிருக்கலாம். ஆக்யானம் என்றால் கதை என்று அர்த்தம். உப ஆக்யானம் - உபாக்யானம் என்றால் கிளைக்கதை. பெரிசாக ஒரு கதையை ஒரு இதிகாசமோ, புராணமோ சொல்லிக் கொண்டு போகும்போது அதில் கிளைக்கதையாக வருவதே உபாக்யானம்.
‘மெயின்’ கதையின் பாத்திரங்கள் சம்பந்தப்படாமல் முழுக்க வேறு பாத்திரங்களைப் பற்றியே உபாக்யானங்கள் வருவதுமுண்டு. மகாபாரதத்தில் இப்படித்தான் பஞ்சபாண்டவர் சம்பந்தமேயில்லாத நளோபாக்யானம் முதலான பல கிளைக்கதைகள் வருகின்றன. இப்படியில்லாமல் ‘மெயின்’ கதையின் பாத்திரங்களுடைய சம்பந்தமுடையதாக மெயின் கதையிலிருந்து எடுக்கமுடியாத அதன் ஒரு பிரிவாகவே, அங்கமாகவே, ஆனாலும் ஒரு தனிக் கதாம்சமுள்ளதாக, அதாவது கழித்துக் கட்ட முடியாத கிளைகளாக உள்ள உபாக்யானங்களும் உண்டு.
சயமந்தகமணி உபாக்யானம் பாகவதத்தில் இப்படித்தான் பார்ட் மற்றும் பார்சல் - ஆக இருக்கிறது. சயமந்தகம் என்ற தெய்வீகமான மணியை மையமாக வைத்துச் சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணப் பரமாத்மாவுக்கே ஏற்பட்ட பெரிய அபவாதம், அதைப் போக்கிக்கொள்ள அவர் பாடுபட்டது இவற்றை இந்தக் கதை சொல்கிறது.
இதே கதை விஷ்ணு புராணத்திலும் வருகிறது. கொஞ்சம் மாறுதலோடு ஸ்காந்தத்திலும் வருகிறது. அதில் நந்திகேச்வரருக்கும் சநத்குமாரருக்கும் நடந்த சம்வாத ரூபமாக (சம்பாஷணை உருவில்) வருகிறது. இந்த ஸ்காந்தக் கதையில்தான் விக்நேச்வரர் சமாசாரம் வருகிறது. நான் சொல்லப் போவது சநத்குமாரருக்கு நந்திகேச்வரர் சொன்ன இந்தக் கதைதான். அங்கங்கே பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் Version-களையும் கொஞ்சம் அவியல் பண்ணிக் கொண்டேன்.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)