மாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்!

மாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்!
Updated on
2 min read

மாசி மக நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வாழ்வில் சத்விஷயங்கள் நம்மை வந்தடையும். மனதில் இருந்த குழப்பமும் பயமும் நீங்கும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாசி மாதத்தில், நாம் செய்யும் சடங்குகளும் வழிபாடுகளும் மிக மிக வலிமையைக் கொடுக்கும். வாழ்வில் பல உன்னதங்களை நிகழ்த்தும். குடும்பத்தை மேன்மைப்படுத்தும். மாசி மாதம் என்பதே மகத்துவம் மிக்க மாதம். கலைகளையும் கல்வியையும் கற்றுத் தெளிவதற்கு ஏற்ற மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் சிவ வழிபாடு, பெருமாள் ஆராதனை, அம்மன் வழிபாடு, முக்கியமாக மகாலக்ஷ்மி வழிபாடு முதலானவை எண்ணற்ற பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாசி மாதத்தில், மகம் நட்சத்திர நன்னாளை மாசி மகம் என்று போற்றுகிறோம். இந்தநாளில், புனித நீராடுவது விசேஷம். கங்கை, காவிரி முதலான புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் நீராடி, இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம்.

கும்பகோணம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மகாமகக் குளம். இந்தக் குளத்தில் நீராடுவதற்கு முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம் முதலானவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக, பலனுக்காக அந்த பூஜையைச் செய்கிறோமோ அதற்கு உரிய வேண்டுகோளை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதே சங்கல்பம் எனப்படுகிறது.

மகாமகக் குளத்தில் நீராடுவதற்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். பின்னர் பஞ்ச கவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராடுவது சிறப்பு வாய்ந்தது.

கும்பகோணம் என்றில்லை. உலகில் எங்கே இருந்தாலும் நாம் குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரை, கங்கையாக, காவிரியாக, புண்ணிய நதியாக பாவித்து நீராடலாம் என்கிறது சாஸ்திரம். முக்கியமாக, மாசி மக நன்னாளில், தானம் செய்வது மிகவும் விசேஷம்.

பொதுவாகவே, புண்ணிய காலங்களில் தானம் செய்வது அவசியம். கணக்கிலடங்காத பலன்களைத் தரும். முற்காலத்தில் அரசர்கள் முதல் எல்லோருமே சமுதாயத்தில் உள்ள எளியவருக்கும், கல்விமான்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் தானங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோன்று புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போதும், புனித நதிகளில் நீராடும்போதும் மற்றும் முன்னோர்களை நினைவு கூரும்போதும் தானங்கள் செய்ய வேண்டும் என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு கடமை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

‘‘பசு, பூமி அல்லது தானியங்கள், ஆபரணங்கள், உணவு முதலானவற்றை அந்தக் காலத்தில் தானமாக வழங்கினர் என்கிறது சரித்திரக் குறிப்புகள். இளநீர் ஓடு அல்லது பூசணிக்காயில் துளையிட்டு அந்தத் துளைக்குள் நவரத்தினங்களை இட்டு நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு, நம் தகுதிக்கேற்ப, பயனுள்ள பொருட்களை தானமாக கொடுக்கலாம்.

மாசி மக நன்னாளில், எவருக்கேனும் புத்தாடை வழங்கலாம். பத்துப் பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். பெரியவர்களுக்கு நமஸ்கரித்து ஆசி பெறுவது குடும்பத்தில் சுபிட்சத்தைக் கொடுக்கும்.

27ம் தேதி சனிக்கிழமை மாசி மகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in