மாசி மக நன்னாள்; சிக்கல்கள் தீர்க்கும் சிவா -விஷ்ணு வழிபாடு! 

மாசி மக நன்னாள்; சிக்கல்கள் தீர்க்கும் சிவா -விஷ்ணு வழிபாடு! 
Updated on
1 min read

மாசியில் காவிரி முதலான நீர்நிலைகளில் நீராடினாலே புண்ணியம். அதிலும் மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், நீராடுவது மகத்தான புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாசி மாதம் என்றாலே மகம் நட்சத்திரம் நினைவுக்கு வரும். மகம் நட்சத்திரம் என்றாலே மாசி மகம் நினைவுக்கு வரும். மாசி மகம் என்றாலே வடக்கே நடைபெறுகிற கும்பமேளாவும், தெற்கே கும்பகோணத்தில் நடைபெறுகிற மகாமகத் திருவிழாவும் நினைவுக்கு வரும்.

மாதந்தோறும் மகம் நட்சத்திரம் வரும். மாசி மாதத்தில் வருகிற மகம் நட்சத்திர நாள், மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் என்று போற்றப்படுகிறது.

மாசி மகம் நட்சத்திர நன்னாளில், கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றியுள்ள சிவன் கோயில்களில், சிறப்பு ஆராதனைகள், விசேஷ வழிபாடுகள், பதினாறு வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும்.

சைவக் கோயில்கள் மட்டுமின்றி, வைணவக் கோயில்களிலும் மாசி மகத்தின் போது விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில், ராஜகோபால சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில் முதலான ஆலயங்களில், காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் அமர்க்களப்படும்.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடிவிட்டு சிவன் கோயில்களுக்கும் பெருமாள் கோயில்களுக்கும் சென்று வழிபட்டு தங்கள் பிரார்த்தனைகளை முன்வைப்பார்கள் பக்தர்கள். கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை முதலான ஊர்களில் காவிரியில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.

மகாமகக் குளத்தின் கிழக்குப் பகுதியில் இறங்கி குளித்துவிட்டு, மேற்குப் பகுதி வழியாக படிகளில் ஏறி கரைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.

மாசியில் காவிரி முதலான நீர்நிலைகளில் நீராடினாலே புண்ணியம். அதிலும் மாசி மாதத்தின் மக நட்சத்திர நாளில், நீராடுவது மகத்தான புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

27ம் தேதி சனிக்கிழமை மாசி மகம் நட்சத்திரப் பெருவிழா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in