

தனி ஒரு பாகமாக ஆகாமல் இணைந்தே அர்த்தநாரீஸ்வரராக இருப்பவர் சிவன். அம்பாளும் சிவனைப் பிரிவதைத் தாங்க முடியாதவளாக இருக்கிறாள் என உணர்த்துவது கேதார கெளரி விரதம். சிவனை அணுவளவும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாள் மேற்கொண்ட விரதம். சதி, பதி ஒற்றுமைக்காகப் பெண்கள் கடைபிடிக்கும் விரதம். ஆண்களும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
பூஜை செய்யும் முறை
கேதார கெளரி விரத பூஜையை ஆண், பெண் இருபாலாரும் இணைந்து செய்யலாம். வழக்கம்போல் பூஜை தொடங்கும் முன், மஞ்சள் பொடியால் பிள்ளையாரைப் பிடித்து வைக்க வேண்டும். பின்னர் விநாயகரை அதில் வந்து தங்கி பூஜையைத் தங்கு தடையின்றி நடத்தித் தருமாறு மனதாரப் பிரார்த்தித்து அருகு, அட்சதை ஆகியவற்றை அவர் மீது தூவ வேண்டும்.
அம்மியையும், குழவியையும் சுத்தம் செய்து, ஒன்றன் மீது ஒன்றை வைக்க வேண்டும். அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் பூசி, மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிவனையும், பார்வதியையும் அதில் வந்து தங்கி வரமளிக்க வேண்டுதல் செய்ய வேண்டும். பின்னர் `ஓம் நமச்சிவாய’ என்ற நாமத்தை 108 முறை ஜெபித்து மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதித்து, தீப, தூப ஆராதனை செய்ய வேண்டும்.
இந்தப் பூஜை செய்பவர்களுக்குச் செல்வ வளம், நற்காரியங்களில் வெற்றி, ஒற்றுமை ஆகியவற்றை அருள வேண்டும் என்பது பார்வதி தேவியின் வேண்டுகோள் என்பதால் சிவன் இவற்றை நிச்சயமாக அருளுவார் என்பது நம்பிக்கை.