Last Updated : 23 Feb, 2021 03:56 PM

 

Published : 23 Feb 2021 03:56 PM
Last Updated : 23 Feb 2021 03:56 PM

செவ்வாழை தானம் தந்தால் தீராத நோயும் தீரும்!  கடல்மகள் நாச்சியாரின் அழகு தரிசனம்! 

விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில், அந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

சென்னை -வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தமும் சரஸ்வதி தீர்த்தம் என்றே போற்றப்படுகிறது.

பெருமாள் - ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் -ஸ்ரீகடல்மகள் நாச்சியார். பங்குனி மாத ரேவதி நட்சத்திர நன்னாளில், உபய நாச்சியாரின் உத்ஸவத் திருமேனிக்கு பால் திருமஞ்சனம் செய்து, படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டுப் பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்யும் வகையில் குழந்தை பிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; திருமண பாக்கியம் விரைவிலேயே கைகூடும் என்பது ஐதீகம்!

ஆதிசேஷனின் மேல் சயனித்த திருக்கோலத்தில், சுமார் 9 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் பள்ளிகொண்ட ரங்கநாதர். இன்னொரு சிறப்பு... அத்தி மரத்தாலான மூர்த்தமாக சேவை சாதிக்கிறார். அத்தி ரங்க தரிசனம், பாவ வினைகளை அனைத்தையும் போக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரகுப்தன், அத்தி மர சமித்துகளைக் கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருக்கிறான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கு வந்து, ஸ்ரீரங்கநாதரை பிரார்த்திக்க, சித்ரகுப்தன் எழுதி வைத்துள்ள மொத்தப் பாவக் கணக்குகளும் நீங்கும். வைகுண்டப் பதவியை அடையலாம் என்று நிகமாந்த மகாதேசிகர் தனது மெய்விரத மான்யத்தில் அருளியுள்ளார்!

இங்கே உள்ள விமானம் சப்தக விமானம். அற்புதமாகவும் சாந்நித்தியத்துடனும் திகழ்கிறது. சப்தக விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார் திருமால். சப்த ரிஷிகளும் இங்கு வாசம் செய்து, பரம்பொருளை வழிபடுவதாக ஐதீகம்.

விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில், அந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x