

மாசி செவ்வாய்க்கிழமையில், முருகப்பெருமானை வழிபடுங்கள். துர்கையைத் தரிசியுங்கள். துர்கை தீயசக்திகளை விரட்டுவாள். கந்தன் கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்வான். திருச்செந்தூர் முதலான அறுபடைவீடுகளிலும் மற்றும் உள்ள முருகப்பெருமான் கோயில்களிலும் காலையும் மாலையும் இரண்டு வேளையும் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு, மயில்வாகனனை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்!
பொதுவாகவே, செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கும் உகந்தது. அம்பாள் வழிபாட்டுக்கும் அருமையான நாள்! எந்த மாதமாக இருந்தாலும் எந்த செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் முருக வழிபாட்டுக்கும் அம்பாள் வழிபாட்டுக்கும் உரிய அற்புதமான நாள். செவ்வாய்க்கிழமைகளில், இவர்களைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஆலயங்களுக்கு வருவார்கள். அழகன் முருகனைத் தரிசித்துச் செல்வார்கள்.
சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதி மற்றும் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீதுர்கை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விசேஷ அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். இந்த நாளில், அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவார்கள் பெண்கள். அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், கணவரின் ஆயுள் நீடிக்கும். தீராத நோயும் தீரும். இல்லத்தில் தடையின்றி சுபகாரியங்கள் நடந்தேறும்.
அதேபோல், செவ்வாய்க்கிழமைகளில், ராகுகால வேளையில், ஸ்ரீதுர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது, குடும்பத்தில் ஒற்றுமையை பலப்படுத்தும். பிரிந்திருந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். வீட்டைச் சுற்றியுள்ள துர்தேவதைகள் விலகி ஓடும் என்கிறார்கள் பக்தர்கள்!
அதேபோல், சிவாலயங்களில் உள்ள முருகப்பெருமான் சந்நிதியிலும் கந்தக் கடவுள் தனியே கோயில் கொண்டிருக்கும் தலங்களிலும் காலையும் மாலையும் ஸ்ரீசுப்ரமண்யருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மாசிச் செவ்வாய்க்கிழமையில் முருக தரிசனம் மகா புண்ணியம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் வந்து வேலவனை தரிசித்து வழிபட்டால், தோஷம் விலகும், சந்தோஷம் பெருகும் என்று ஆச்சார்யர்கள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள்.
சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி, ஒரகடம் அருகில் அமைந்துள்ள வல்லக்கோட்டை, சென்னை வடபழநி முருகன் கோயில், திருத்தணி திருத்தலம், திருச்சி வயலூர் முருகன் ஆலயம், பழநி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்தூர் முதலான அறுபடைவீடுகளிலும் மற்றும் உள்ள முருகப்பெருமான் கோயில்களிலும் காலையும் மாலையும் இரண்டு வேளையும் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு, மயில்வாகனனை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்!
செவ்வாய்க்கிழமையை மறக்காதீர்கள். மாசி செவ்வாய்க்கிழமையில் மறக்காமல், ஆலயம் சென்று வழிபடுங்கள். வளமும் நலமும் பெறுவீர்கள்!