Last Updated : 22 Feb, 2021 01:08 PM

 

Published : 22 Feb 2021 01:08 PM
Last Updated : 22 Feb 2021 01:08 PM

திருக்கோஷ்டியூரில் நான்கு பெருமாளின் திவ்விய தரிசனம்!  விளக்கு எடுத்துச் சென்றால் விடியல் நிச்சயம்! 

திருக்கோஷ்டியூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு பெருமாளின் திருக்கோலங்களை அற்புதமாகத் தரிசிக்கலாம். இங்கே விளக்கு எடுத்து வந்து வீட்டில் பூஜித்து வந்தால், நம் வாழ்க்கையில் விடியல் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர். சிவகங்கையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஊர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்விய க்ஷேத்திரம்.
கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அழகுக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள். மது கைடபர்களும் ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசரஸ்வதிதேவியும் என காட்சி தருகிறார்கள்.

வருடத்தில், இங்கே மூன்று விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, நவராத்திரி வைபவம், மாசி மகத் திருவிழா என மூன்று விழாக்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

மற்ற விழாக்களை விட மாசி மக விழா இன்னும் பிரமாண்டமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழவும் இங்கே நடைபெறுகிறது. பனிரெண்டு நாள் திருவிழாவாக நடக்கிறது மாசிப் பெருந்திருவிழா.

கருவறையில் சந்தானக்கண்ணன் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார் குழந்தைக் கண்ணன். தொட்டிலில் உள்ள இந்த சந்தானக் கண்ணனை, பிரார்த்தனைக் கண்ணன் என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள். இவரை வணங்கி வழிபட்டு வந்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீமகாலக்ஷ்மி தாயார், தனிச்சந்நிதியில் அற்புதமான திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் முதலான பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் அகலும் என்பது உறுதி என்கிறார் கோயிலின் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

ஓம் என்றும் நமோ என்றும் நாராயணா என்றும் மூன்று சொற்களாக அமைந்துள்ள எட்டெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வகையில் மூன்று தளங்கள் திருக்கோஷ்டியூர் தலத்தில் அமைந்திருக்கின்றன. கீழ்த்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் என்றும் பூலோகப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். நான்காவது தளத்திலும் காட்சி தருகிறார் பெருமாள்.

விமானத்தின் கீழ்த்தளத்தை அடுத்து முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலத்தில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் திருப்பாற்கடல் பெருமாள். இவருக்குத்தான் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள் எனும் திருநாமம் அமைந்துள்ளது.

இரண்டாவது தளத்தில், உபேந்திர பெருமாளாகக் காட்சி தருகிறார் திருமால். அதாவது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

மூன்றாம் அடுக்கில் பரமபத பெருமாளாக வைகுண்ட பெருமாளாக அமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார். திருக்கோஷ்டியூர் தலத்துக்கு வந்தால், நான்கு திருக்கோலங்களில் உள்ள பெருமாளை திவ்வியமாகத் தரிசனம் செய்யலாம் என்கிறார் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.
திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜர், மக்களுக்கு எட்டெழுத்து மந்திர மகிமையையும் மந்திரத்தையும் எடுத்துரைத்த புண்ணிய பூமி. மாசி மக நன்னாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தெப்போத்ஸவத்தில் பங்கேற்பதும் முன்னதாக தேரோட்டத்தில் கலந்துகொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

திருக்கோஷ்டியூர் தலத்துக்கு வந்தாலே புண்ணியம். பெருமாளை ஸேவித்தாலே மகா புண்ணியம். நம் பாவங்களெல்லாம் பறந்தோடும் என்கிறார்கள் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x