ரத சப்தமியில் சுபிட்சம் தருவார் சூரிய பகவான்!  அருளும்பொருளும் அள்ளித்தரும் ஆதித்ய ஹ்ருதயம்

ரத சப்தமியில் சுபிட்சம் தருவார் சூரிய பகவான்!  அருளும்பொருளும் அள்ளித்தரும் ஆதித்ய ஹ்ருதயம்
Updated on
2 min read

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரிய பகவானைப் போற்றி வணங்கும் மிக முக்கியமான நாளாக ரத சப்தமி வைபவம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை ரதசப்தமி.

ரத சப்தமி நாளில், சூரிய உதயத்தின் போது விரதத்தை மேற்கொள்ளவேண்டும். வீட்டில் அல்லது நதிக்கரைகளில் சுத்தமான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளுவார்கள். அங்கே சூரிய ரதத்தை கோலமாக வரைந்து கொள்வார்கள். அதேபோல், வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ சூரிய ரதத்தை வரைந்து கொள்வதும் வழக்கம். அந்த ரதத்தில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து பவனி வருவதாக பாவித்துக் கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அடுத்து, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, செந்நிற மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள். பிறகு அந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். அப்போது, ஆதித்ய ஹ்ருதயம் முதலான ஸ்லோகங்கள் படிப்பது ஈடில்லாத பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
அதாவது ரத சப்தமி நாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து, சூரியனாரை வணங்கினால், ஏழு பிறவியிலான பாவங்களும் விலகும். ஏழு தலைமுறை சந்ததியினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரியன் குறித்த ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும் சர்க்கரைப் பொங்கல், கோதுமை ரவா பாயசம், உளுந்து வடை முதலானவற்றை நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை பசுவுக்கு வழங்குவது, சந்ததிக்கு பலம் சேர்க்கும்! தலைமுறை இடைவெளியின்றி வாழ்வாங்கு வாழச் செய்யும். வியாபாரத்தில் விருத்தியை ஏற்படுத்தித் தரும். குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும்.

ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாயினும் தடையின்றி நடந்தேறும். லாபம் சிறந்து விளங்கும். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!

முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை இன்னும் இன்னுமாக மேன்மைப்படுத்துவது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்கிறார்கள்.

ரத சப்தமி நன்னாளில்... சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கவலைகளும் துக்கங்களும் காணாமல் போகச் செய்வார் சூரிய பகவான்!

19.2.2021 வெள்ளிக்கிழமை ரதசப்தமி நன்னாள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in