

சுக்லபட்ச சதுர்த்தியில், சியாமளா நவராத்திரி காலத்தில் சதுர்த்தியில் ஆனைமுகத்தானை வேண்டுவோம். பிள்ளையாரை தரிசித்து பிரார்த்தனைகள் செய்துவிட்டு, சிதறுதேங்காய் உடைத்து மனதார வேண்டிக்கொள்வோம்.
வழிபாடுகளில் மிக மிக வலிமையானவை என்று தேவி வழிபாட்டைச் சொல்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். சாக்த வழிபாடு மற்ற வழிபாடுகளைப் போல் எளிமையானவை அல்ல என்றும் அதேசமயம் நம் உயிரின் அடிநாதம் வரை சென்று ஊடுருவும் மகா வல்லமை கொண்டவை என்றும் சாக்த உபாஸகர்கள் தெரிவிக்கிறார்கள்.
தேவி வழிபாடு செய்வது என்பது மனதையும் உடலையும் வலிமையாக்கக் கூடியது. அம்பிகையே உலகின் சக்தியாகத் திகழ்கிறாள். பிரபஞ்ச சக்தி என்பவளே சக்திதான். அம்பிகை, அபிராமி, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி, காமாட்சி, மீனாட்சி, காந்திமதி, கருமாரி, காளிகாம்பாள் என்று ஏராளமான திருநாமங்கள் உமையவளுக்கு உள்ளன.
அம்பாள் வழிபாடு, அம்மன் வழிபாடு, அம்மன் வழிபாடுகளில் உள்ள மாரியம்மன் வழிபாடு, செல்லியம்மன், இசக்கியம்மன் முதலான கிராம தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என்றெல்லாம் பரந்துவிரிந்திருக்கின்றன அம்பாள் வழிபாட்டு முறைகள்.
நமக்கெல்லாம் சக்தியைக் கொடுப்பவள் தேவி. உத்வேகத்தை தருபவள் அம்பாள். உலகாளும் பராசக்தியாகத் திகழ்பவள் உமையவள். அப்பேர்ப்பட்டவளே விநாயகர் பூஜை செய்துதான், சிவபெருமானை அடைந்தாள். பிரியாவரம் பெற்றாள் என்கிறது புராணம்.
பிள்ளையாரை எந்தநாளும் வணங்கலாம். வழிபடலாம். ஆராதனைகள் செய்யலாம். முக்கியமாக, சதுர்த்தி திதியில் விநாயகர் வழிபாடு செய்வது விசேஷம். அதிலும் குறிப்பாக, சுக்ல பட்ச சதுர்த்தி கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்று வருவதுண்டு. சுக்ல பட்சம் என்றால் வளர்பிறை. கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. இரண்டு சதுர்த்தியுமே விசேஷமானவைதான். ஆராதனைகள் செய்தால் அளப்பரிய நன்மைகள் கிடைப்பவைதான்.
வளர்பிறை எனப்படும் சுக்ல பட்சத்தில் வரும் சதுர்த்தி, நமக்கு வளமும் நலமும் தந்தருளக் கூடியது. தை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். சியாமளா நவராத்திரியில், சுக்லபட்ச சதுர்த்தியில் விநாயகருக்கு வேண்டிக்கொள்வதும் அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வெள்ளெருக்கு மாலை சமர்ப்பித்து வேண்டிக்கொள்வதும் இதுவரையிலான அனைத்துத் தடைகளையும் நீக்கும் என்பது ஐதீகம்.
சுக்லபட்ச சதுர்த்தியில், சியாமளா நவராத்திரி காலத்தில் சதுர்த்தியில் ஆனைமுகத்தானை வேண்டுவோம். பிள்ளையாரை தரிசித்து பிரார்த்தனைகள் செய்துவிட்டு, சிதறுதேங்காய் உடைத்து மனதார வேண்டிக்கொள்வோம்.
சக்தியின் அருளும் நிச்சயம்; சக்திமைந்தனான பிள்ளையாரின் அருள் கிடைப்பதும் உறுதி!