

மாசி சோமவாரத்தில் சதுர்த்தியும் இணைந்து வரும் அற்புத நாளில், ஆனைமுகனைத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவார் பிள்ளையார். விக்னங்களையெல்லாம் களைந்து காத்தருளுவார் விநாயகர்.
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் பிள்ளையாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறது புராணம். நம் வழிபாடுகளிலும் பிள்ளையாருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலயங்களில், ஆகம விதிகளின் படியும் எந்தக் கோயில் இருந்தாலும் பிள்ளையார் சந்நிதி நிச்சயமாக அமைந்திருக்கும்.
அதேபோல், வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தும் போதும் கிரகப் பிரவேசம் மாதிரியான வைபவங்களை நிகழ்த்துகிற போதும், ஹோமங்கள் வளர்த்து பூஜை செய்கிற போதும் முதலில் பிள்ளையாருக்கு வணக்கம் செலுத்திவிட்டுத்தான் பூஜையில் இறங்குவோம்.
அதனால்தான் பிள்ளையாரை முதல்வன் என்று போற்றுகிறோம். முதற்கடவுள் என்று வணங்குகிறோம். முழுமுதற் கடவுள் என்று சாஸ்திரங்களும் புராணங்களும் கொண்டாடுகின்றன.
பிள்ளையார் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்திருப்பார். அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வார். அரசமரத்தடியில் இருப்பார். ஆற்றங்கரையில் வீற்றிருப்பார். தெருவில் கோயில் கொண்டிருப்பார். முச்சந்தி மாதிரியான இடங்களில் உள்ள தோஷங்களையும் திருஷ்டியையும் போக்கி அருளுவார் விநாயகப் பெருமான்.
இத்தனை பெருமைக்கும் அருளுக்கும் உரிய பிள்ளையாரை, சதுர்த்தியில் வணங்குவதும் பிரார்த்தனை செய்து கொள்வதும் எண்ணிலடங்கா பலன்களைத் தந்தருளக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். பிள்ளையார் துதியும் விநாயகர் அகவல் பாராயணமும் நம் வாழ்வில் இதுவரையிலான தடைகளையெல்லாம் தகர்த்து அருளும் என்பது ஐதீகம்.
அரசமரத்தடியிலும் ஆற்றங்கரையிலும் அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு சுற்றியிருக்கிற அருகம்புல்லே போதும். எளிமையானவர். எளிதில் நாம் அணுகி பிரார்த்திக்கக் கூடியவர். ஆகவே பிள்ளையாருக்கு அருகம்புல் சார்த்தி வணங்குவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் தொழிலிலும் உத்தியோகத்திலும் இருந்த தடைகளைத் தகர்த்துவிடும். வாழ்வில் முன்னேறச் செய்வார் கணபதி பெருமான்!
மாசி சோமவார நாளான இன்றைய நாளில்... சதுர்த்தி நாளில்... ஆனைமுகனை வணங்குவோம். அருளும்பொருளும் அள்ளித் தருவார் பிள்ளையாரப்பன்.