

பக்த பிரகலாதனுக்காக ஸ்ரீமன் நாராயணன் மேற்கொண்ட நரசிம்மாவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள், புண்ணியத் தலமொன்றில் தவம் செய்ய ஆரம்பித்தனர். தவம் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகைக்குள் பெருமாள் காட்சி அளித்தராம். எனவே நேரத்தைக் குறிக்கும் சொல்லான கடிகை என்பதையும், மலை என்பதைக் குறிக்கும் அசலம் என்றும் சொல்லையும் இணைத்துக் கடிகாசலம் எனப் பெயர் கொண்டது இத்திருத்தலம். பின்னர் அழகிய தமிழில் திருக்கடிகை என அழைக்கப்பட்டுவந்தது. தற்போது இத்தலம் சோழிங்கபுரம் என வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் பெரிய மற்றும் சிறிய மலைகள் இரண்டு உண்டு. சுமார் ஆயிரம் படிகள் கொண்ட பெரிய மலையில்தான் யோக நரசிம்மர் குடிகொண்டுள்ளார். இந்தப் படிகள் நெட்டாகவே இருப்பதால் ஏறுவது சற்றுச் சிரமம்தான். இருந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் ஏறிவிடலாம். ‘டோலி’ வசதியும் உண்டு. இப்பெரிய மலை மீது கடிகை தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக்கனி என்ற ஆழ்வார் திருவாக்கின்படி யோக நரசிம்மர் நான்கு திருக்கரங்களோடு சாந்த சொரூபியாய் யோகத்தில் அமர்ந்திருக்கும் காட்சி அற்புதம். தனிச் சந்நிதியாக அமிர்தவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார்.
இப்பெரிய மலைக்கு அருகிலேயே நானூறு படிகள் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். தனது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் யோக நிலையில் அமர்ந்துள்ள நரசிம்மரும், அனுமனும் ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில், விசேஷமாக ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் கண் திறந்து அருளுவதாக ஐதீகம்.